Saturday, March 16, 2013

நன்னெறி - சிவப்ரகாச ஸ்வாமிகள் - 40

நன்னெறி - சிவப்ரகாச ஸ்வாமிகள் - 40

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!
பொருள்: மின்னொளி போன்ற ஜடாமுடிகளைக் கொண்ட

விநாயகரைத் தொழ நன்னெறி வெண்பா நாற்பதும் பாட வருமே.

1. என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.
பொருள்: மலர் சூடிப் பொலியும் பெண்ணே! நம் அழகிய கை
புகழ்ச்சிக்காக சென்று சுவையான உணவை நாவிற்குக் கொடுத்து
உதவுவதில்லை.  அது போல தீதில்லாத நல்லவர்களும் தம்மை
என்றும் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களுக்கும் சென்று பொருள்
கொடுத்து உதவுவர்.

2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு.
பொருள்: அழகிய நெற்றியை உடையவளே! குற்றமில்லாதவர் கூறும்
கடுஞ்சொற்களும் இனிது.  மற்றவர் பேசும் உற்றதான இனிய
சொற்களும் கெடுதே.  ஈசன் நல்லவனான சாக்கிய நாயனார் எறிந்த
கற்களை விரும்பினாரே அன்றி, கரும்பு வில்லால் மன்மதன் எறிந்த
மலர் அம்புகளை விரும்பவில்லை.

3. தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.
பொருள்: அழகிய கொங்கையை உடையவளே! பசுவின் பால்
வேண்டுமென்றால் அதற்குப் பிடித்த அதன் கன்றின் உதவியோடு
கறந்து கொள்வது போல், நமக்கு உதவாதவரிடமிருந்து ஒன்றைப்
பெற வேண்டுமென்றால், அவர்க்குப் பிடித்தவரின் உதவியால்
அதைப் பெற்றிட வேண்டும்.

4. பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
பொருள்: எவர்க்கும் உதவாத கருங்கடலின் நீரை புயல் மேகங்கள்
முகந்து சென்று எப்படி மழையாக எவர்க்கும் கொடுத்து
விடுகிறதோ, அது போல பிறர்க்கு உதவாதவர் பெரும்
செல்வத்தையும், எவர்க்கும் உதவுபவர் எடுத்துக் கொள்வர்.

5. நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம்.
பொருள்: பூங்குழலை உடையவளே! நெல்லிலிருந்து பிறிந்த உமி
மீண்டும் அதனோடு சேர்ந்தாலும் முன்புபோல் திடமாக இருக்காது. 
அது போலவே பிறிந்த இருவர் மீண்டும் சேர்ந்தாலும் அந்த நட்பு
அற்பமாகவே இருக்கும்.

6. காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகருமம் செய்யவே - ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண்.
பொருள்: கூறப்படும் பதினாறு கலைகளும் பொருந்திய நிலவு
போன்ற முகத்தவளே!  இரண்டு கண்களும் ஒன்றையே பார்ப்பது
போல், அன்பான கணவன் மனைவியும் ஒருமித்து தீதில்லாத ஒரு
கருமத்தையே செய்வார்கள்.

7. கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
பொருள்: பெரிதாக முழங்கிக் கொண்டிருந்த குளிர்ந்த கடல் நீரை
முனிவர்க்கெல்லாம் அரசராகிய அகத்தியர் தம் கையாலேயே
குடித்து வற்றச் செய்து விட்டார்.  எனவே நாம் கற்ற கல்வி கடல்
போன்றதானாலும், கர்வம் வந்து விட்டால் அது ஆண் சிங்கம்
போன்று நம்மைத் தள்ளி விடும்.

8. உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு?
பொருள்: திரண்டு வரும் வெள்ளத்தை எப்போதும் கடந்து விடாமல்
கரையானது காத்து விடும், கரையைத் தாண்டி வெள்ளம் ஊருக்குள்
புகுவது என்பது அரிதானது.  அது போல உள்ளத்திலிருந்து
பொங்கிவரும் கோபத்தை மனத்தில் அடக்கிக் கொள்வதே சிறந்த
குணம்.

9. மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து.
பொருள்: அன்பர்கள் படைக்கும் பலியை ஏற்றுக்கொள்ளும் சிவனது
விரிந்த சடையின் மேல் இருக்கும் பாம்பு, படர்ந்த சிறகுடைய
கருடனைப் பார்த்து அஞ்சாது.  அது போல மெலிந்தோர்
வலிந்தோரை அண்டி விட்டால், பலம் மிகுந்த தன் எதிரியிடம்
பயப்படத் தேவையில்லை.

10. தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று.
பொருள்: நிலவானது தன்னிடமிருக்கும் கறையான இருளை நீக்கிக்
கொள்வது பற்றி நினைக்காது, மேலே நின்று உலகில்
படர்ந்திருக்கும் இருளைப் போக்கவே நினைக்கும்.  அது போலவே
உயர்ந்தோரும் தன் குறைகளையும், கஷ்டங்களையும் பற்றி
நினையாது, தளர்ந்து தன்னிடம் வந்து பிறர்க்கூறும் கஷ்டங்களைத்
தீர்த்து வைப்பர்.

11. பொய்ப் புலன்கள் ஐந்து நோய் புல்லியர் பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும் கொல் கல்தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.
பொருள்: சூறாவளியால் சிறு துரும்பை சுழற்றித் தூக்கி எறிய
முடியுமே அன்றி கல்தூணிடம் அதன் பலம் செல்லாது. 
அதுபோலவே பொய்யான நமது ஐம்புலன்களும் மெலிந்தோரிடமே
துன்பங்களை உண்டாக்குமே அன்றி மெய்யறிஞர்களை அதனால்
ஒன்றும் செய்து விட முடியாது.

12. வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு.
பொருள்: திருத்தமான அணிகலன்களை உடையவளே! குளிர் நீர்
பொத்தல் உள்ள குடத்தில் நிற்காது வெளியே ஒழுகிவிடுவது
வியப்பல்ல, அந்த ஓட்டைக்குடத்திலேயே அது தங்கியிருந்தால்
அதுவே வியப்பு.  அது போல ஒன்பது ஓட்டைகளுள்ள இந்த
உடம்பில் வெளியேறிவிடாமல் உயிர் இருந்து கொண்டிருக்கிறதே
அதுவே வியப்பு.

13. பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்ற முலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
பொருள்: மலைபோன்ற கொங்கைகளை உடையவளே! நிலவின்
கிரணங்கள் அதன் கலைகளைப் பொறுத்து ஏறி, இறங்கும்.  அது
போலவே மேலோர், கூடிக், குறையும் தன் செல்வச் செழிப்பை
ஒட்டி விருப்பத்தோடு பிறர்க்கு உதவுவர்.

14. தொலையாப் பெரும் செல்வந் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் இலையால்
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈரங்கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.
பொருள்: ரீங்காரம் செய்யும் வண்டு மொய்க்கும் மலர்களை
அணிந்தவளே! தொலையாத செல்வத்தை மேரு மலையை விட
அதிகமாக சேர்த்து விட்டோம் என்று செருக்கு மேலோரிடம்
இருப்பதில்லை.

15. இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழியிலார்க்கு ஏதுமுது நூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு.
பொருள்:  நல்ல குணமுடையவளே! ஊமைகளுக்கு பழம்பெரும்
நூல்களால் என்ன பயன்?  குருடர்களுக்கு விளக்கால் என்ன
பயன்?  அது போலவே அன்பு இல்லாதவர்க்கு இங்கு இடம்,
பொருள், ஏவல், இன்னும் மற்றெதெல்லாம் இருந்தும் என்ன பயன்?

16. தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.
பொருள்: கடலானது தன்னை அடுத்த உப்பங்கழியிலும் பாய்வது
போல, உயர்ந்தோர் மதியாதவராயினும், இழிந்தவராயினும் தன்னை
அண்டினவரை தன்னையும், தன் நிலையையும் ஆராய்ந்து அவர்
தம் துன்பம் தீர்ப்பர்.

17. எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்றவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ!
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி.
பொருள்: பசும்பொன்னாலான வளையல்களை அணிந்தவளே!
வாழ்ந்திருந்து எல்லாருக்கும் உதவி, அழிந்த வாழையின் கீழ்
தோன்றிய அதன் கன்றும் எல்லாருக்கும் கனி, காய், இலை, தண்டு
இவைகளைத் தந்து உதவவே செய்யும், அது போலவே பிறர்க்குக்
கொடுத்து வறுமை எய்திய தகப்பனுக்குத் தோன்றிய மைந்தர்களும்
ஈகை குணத்தோடே இருப்பர்.

18. இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன் செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல்.
பொருள்: பொன்னால் செய்த, ஒலிக்கும் வளையல்களை
உடையவளே! வெம்மையான கதிர்களை உடைய சூரியன் வரவால்
கடல் பொங்குவதில்லை, குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரன்
வரவாலேயே மகிழ்ந்து பொங்குகிறது.  அது போலவே நீரால்
சூழப்பட்ட இவ்வுலகும் இன்சொல்லாலேயே மகிழுமே அன்றி,
வன்சொல்லால் மகிழாது.

19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண்டு இன்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவர்- வல்லோர்
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர.
பொருள்: தென்றல் வரும்போது தளிர் காட்டி மலர்ந்து வளரும்
தேங்கனிகளைக் கொண்ட மாமரம், சுழல் காற்று வந்தால் வருந்தும்.
அது போல வல்லவர்களும் நல்லோர் வரவால் மலர் முகம்
கொண்டு மகிழ்வர், மற்றோர் வந்தால் புழுங்குவர்.

20. பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
பொருள்: தேர்ந்தெடுத்த அணிகளை அணிந்திருப்பவளே! முற்றிய
நோயால் வருந்தும் பிற உறுப்புகளைக் கண்டு நீர் சொரியும் கண்
போல, பெரியோர் பிறர் படும் கஷ்டங்களைக் கண்டு
நெருப்பிலிட்ட நெய் போல் உருகுவர்.

21. எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம் - எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை.
பொருள்:  கற்றோர் ஆராய்ந்து தேடும் சிவபெருமானின்
ஜடாமுடியைக் கண்டதும் கங்கையின் பெருக்கு ஒடுங்கி விடுவதைப்
போல, மெய் ஞானியர் முன் ஏனையோர் கற்ற கல்வி அனைத்தும்
இல்லாது போய் விடும்.

22. ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க - நீக்கு
பவர் யார்? அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு.
பொருள்: பாம்பிடம் தோன்றிய மணி என்றும், பாற்கடலில்
தோன்றிய விஷம் என்றும் கொள்வார் எவருமிலர். எனவே
உயர்த்துகின்ற அறிவைக் கொள்ளாது பிறப்பினால் உயர்வு தாழ்வு
பார்க்க வேண்டாம்.

23. பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்! பலகால்
எறும்பு ஊரக் கல் குழியுமே!
பொருள்: பூரித்திருக்கும் தனங்களை உடையவளே!  பலகாலம்
எறும்பு ஊரக் கல் குழிந்து விடும்.  அது போல ஆண்களுடன்
பேசிக் கொண்டிருந்தாலே, பெண்களுக்குப் பெருமையளிக்கும் கற்பு
எனும் நோன்பு கொள்ளும் நெஞ்சுறுதி தளர்ந்து விடும்.

24. உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி.
பொருள்: செழித்திருக்கும் சோலைப்பூக்களை வண்டு போய்ச்
சேரும், ஆனால் காக்கை வேப்பம்பழத்தையே விரும்பும். 
அதுபோல ஒருவரிடம் குணம் இருந்தாலும் கீழோர் பெரிதாகக்
கூறுவது அவர் குற்றங்களையே.

25. கல்லா அறிவிற் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புனையில் புகும் ஒண் பொருள்.
பொருள்: வில் போன்ற புருவங்களை உடைய கரு விழியாளே! 
பெரும் பாரமுள்ள பொருளும், தெப்பத்தில் சேர்ந்தால் தன் வலிமை
குறைந்து விடுவதைப் போல, கல்வியறிவு இல்லாத கீழோரிடம்
சேர்ந்த உயர்ந்தோர் பெருமையும் வலுவில்லாததாகி விடும்.

26. உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவாயிற்றோ விளம்பு.
பொருள்: மடந்தையே! கதிரவனின் ஒளியின் அளவு நம் கண்
அளவா அல்லது விண் அளவா கூறு.  அது போலவே
புலவர்களும் ஒருவர் உடல் சிறுமையைக் கொண்டு அவர்கள்
கல்விக் கடலின் அளவை அலக்ஷ்யம் செய்யார்.

27. கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.
பொருள்: முளைக்கும் பற்களானது கடினமான பொருள்களையும்
தான் மென்று நல்ல சுவையை நாவிற்குக் கொடுக்கும்.  அது
போலவே கற்றோரும் தன் மெய் வருத்தி, ப்ரதியுபகாரம் கருதாது
பிறர்க்கு உதவிடுவர்.

28. முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனி விளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை.
பொருள்: நன்கு பழுக்காத காயாக இருந்தாலும் வாழை
உணவுக்காகும்.  பழுத்திருந்தாலும் எட்டி உணவுக்காகுமோ சொல். 
அது போலவே கற்றோர் தம்மிடம் கோபம் கொண்டோருக்கும்
கொடுப்பர், ஆனால் மற்றோர் அவரிடம் கனிவாகப்
பேசுபவருக்கும் எதையும் கொடுக்க மாட்டார்.

29. உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடியாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதிமான்.
பொருள்: இசையை ஒத்த குளிர்ந்த பேச்சுடையவளே!  நிலவில்
இருக்கும் மான் பூமியில் இருக்கும் புலிக்கு அஞ்சுமோ?  அது
போல நெஞ்சத்தை உயர்ந்த பரம்பொருளிடம் வைத்தோர் உடலுக்கு
ஒரு கோடி துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும் கவலைப்பட
மாட்டார்கள்.

30. கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு.
பொருள்: வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டு வைக்காதவர்
பெருக்கெடுத்து வெள்ளம் வரும்போது என்ன செய்வார் கூறு.  அது
போலவே உயிரைக் கொள்ளும் யமன் வருவதற்கு முன்பே
மனங்கனிந்து அறம் செய்து பிழைத்துக் கொள்ள வேண்டும்.

31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேல்
கை சென்று தாங்கும் கடிது.
பொருள்: பொருந்திய அணிகளை உடையவளே! உடலின் மேல்
பெரிய குச்சியின் அடி விழுவதற்கு முன் கையானது விரைந்து
சென்று தன் மேல் வாங்கிக் கொள்ளும்.  அது போல
பேரறிஞர்களும் பிறர் துன்பங்களைத் தாங்க வீரத்தோடு விரைவார்.

32. பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ் ஒன்று உயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான்.
பொருள்: வைரம் பாய்ந்த திண்மை கொண்ட உயர்ந்த கதவும்
தாழ்ப்பாள் இல்லையென்றால் வலுவில்லாததே.  நன்னெறிகளை
உடையவளே! அது போல சொல்லப்படும் நூல்களின் பயனை
அறியாதவர் செய்யும் அறங்களும் பயனற்றதே.

33. எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல்.
பொருள்: நாம் கட்டும் குளத்திற்கு நீர் தளும்பாது இருக்க கரை
கட்டுகிறோம்.  ஆனால் கடலுக்குக் கரை கட்டுவதில்லை.  அது
போல நம்மை தூற்றாதிருப்பதற்காக இழிந்தவர்களைப் போற்றிக்
கொண்டிருக்கலாம்.  ஆனால், குறைவற்ற அறிவுடையோருக்கு
அந்த போற்றுதல் தேவையில்லை.

34. அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.
பொருள்: பிறை போன்ற நெற்றியை உடையவளே! அழகு தரும்
ஒளி பொருந்திய விழி இருளைக் கண்டு அஞ்சும்.  குருட்டுக் கண்
இருளுக்குப் பயப்படுவதில்லை.  அது போல அறிவுடையோர்
அன்றி அறிவு இல்லாதவர் தம்மைச் சேரும் பழியைக் கண்டு அஞ்ச
மாட்டார்.

35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்.
பொருள்: வெற்றிதரும் நீண்ட வேல், என்னைப் பழிக்காதே என்று
வேண்டிக்கொள்ளும் விழியாளே! வாழைப்பழம் பாலை வேண்டும்,
புளியம்பழம் பாலை விரும்புவதில்லை. அது போல மேன்மக்களே
கற்றோரை விரும்புவர், மற்றவர் மதிப்பதில்லை.

36. தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய்.
பொருள்: எப்போதும் நெல்லுக்கு நீரை இறைப்போமே அன்றி
காட்டில் வளரும் புல்லுக்கு இறைப்பதில்லை.  அது போல
உயர்ந்தோர் தகுதியுள்ளோருக்கே உதவுவர்.

37. பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் சொல்
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
பொருள்: லக்ஷ்மிதேவியை அழகில் வென்றவளே! அகஸ்திய
முனிவர் முன் உயர்வு பேசிய விந்திய மலை அன்று தாழ்ந்து
போயிற்று.  அது போல பெரியோர் முன் தன்னைப் புகழ்ந்து
பேசிக்கொள்ளும் மூடனும் உயர்வு நீங்கித் தாழ்வான்.

38. நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய் முற்றின் தின்தீங் கனியாம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம்.
பொருள்: நல்லவளே கேள்! காய் முற்றினால் உண்பதிற்கு இனிய
கனியாகும்.  இளந்தளிர் முற்றி என்ன ஆகப்போகிறது?  அது
போல நல்லோர் சேர்க்கை நாள்தோறும் நல்லதே.  ஆனால் தீயோர்
சேர்க்கை அப்படி ஆகாது.

39. கற்று அறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே - பொற்றொடீஇ
சென்று படர்ந்த செழுங்கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
பொருள்: பொன் வளையல்களை அணிந்தவளே!  சென்று படர்ந்த
செம்மையான கொடியில் மலர்ந்த மலருக்கு மலர்ந்த ஒரு தினமே
மணமிருக்கும்.  அது போல கல்லாதோரோடு செய்யும் ஆழ்ந்த
நட்பும் சேர்ந்து இருந்தாலும் தீமையையே கொடுக்கும்.

40. பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்.
பொருள்: பொன் போன்றவளே!  மின்னும் அணிகலன்களை
அணிந்திருந்தாலும் எந்த உறுப்புகளும், எதையும் அணியாத
கண்ணுக்கு ஒப்பாவதில்லை.  அது போலவே பொன் அணியும்
வேந்தர்களும் அதை அணியாத பெருங்கல்வி உடைய அறிஞருக்கு
ஒப்பாகார். 

Saturday, January 12, 2013

நல்வழி - ஔவை - 40

நல்வழி - ஔவை - 40
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
பொருள்: பால், தெளிந்த தேன், வெல்லப்பாகு, பருப்பு இவை
நான்கையும் கலந்து (பாயஸம்!) நான் உனக்கு தருவேன்,
உயிர்களுக்கு நல்லது செய்யும், உயர்ந்த யானை முகம் கொண்ட
விநாயகப் பெருமானே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தா.

1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
பொருள்: நாம் செய்யும் புண்ய கார்யங்கள் நமக்கு உயர்வைத்
தரும்.  பாவ கார்யங்கள் நமக்கு அழிவைத் தரும்.  நம் முன்
பிறப்பில் நாம் செய்த அவைகளே நமக்கு சொத்து.  யோசித்துப்
பார்த்தால் எந்த சமயமும் இதைத் தவிர வேறெதையும்
சொல்லவில்லை.  எனவே தீதை ஒழித்து நன்மையே செய்யுங்கள்.

2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
பொருள்: நீதி நூல்களில் உள்ள முறை தவறாது பிறர்க்கு உதவுபவர்
பெரியோர், உதவாதவர் இழிந்தோர்.  சொல்லப்போனால் உலகில்
இது இரண்டே சாதிகளாகும்.

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
பொருள்: துன்பங்களை இடும் பை இது, இதையே இயல்பாக
உடைய உணவை இடும் இந்த பொய்யுடலை மெய்யென்று
நினைத்துக் கொண்டு இருக்காதே.  விரைந்து பிறர்க்கு
உதவுவதையே செய்து வந்து, சம்சாரம் எனும் இந்த பெரும் நோயை
வென்றவரை மோக்ஷமாகிய வீடு அழைத்துக் கொண்டாடும்.

4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
பொருள்: நாம் செய்த புண்யத்தின் காலம் வராத போது நாம்
திட்டமிட்டுச் செய்தாலும் ஒரு கார்யத்தின் பலன் கிடைக்காது. 
காலம் வந்தாலே பலன் கிடைக்கும்.  காலம் கருதாது செய்த
முயற்சி, மாங்காய்க்கு ஆசைப்பட்டு ஒரு குருடன் எறிந்த அவன்
ஊன்று கோல் போல் ஆகிவிடும்.  (நடக்க இருந்த கோலும் போய்,
மாங்காயும் கிடைக்காதது போல்)

5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா - இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
பொருள்: நமக்கு என்று விதிக்கப்படாத ஒன்று நாம் எவ்வளவு
வருந்தி முயற்சித்தாலும் நமக்குக் கிடைக்காது.  நமக்கு என்று
விதிக்கப்பட்ட ஒன்று நாம் எவ்வளவு சொன்னாலும் நம்மை விட்டுப்
போகப்போவதுமில்லை.  ஆனால் இவைகளையே வெகுகாலம்
ஏங்கி நினைத்து நெஞ்சம் புண்ணாகி பின் இறந்து போவதே மனிதர்
தொழிலாகி விட்டது.

6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு
பொருள்: திரைகடல் தாண்டிப் போய் வந்து வேலை செய்து
பொருள் சேர்த்தாலும் ஒருவர்க்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்
என்று விதி இருக்கிறதோ அவ்வளவே கிடைக்குமே ஒழிய,
இன்னொருவர் சுகமும் சேர்த்து அவருக்குக் கிடைக்கப்
போவதில்லை.

7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
பொருள்: எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடல் புழுக்களும்,
நோய்களும் மலியும் இடமே.  இதை அறிந்த நல்லவர்கள் தாமரை
இலை நீர்ப் போல இதனிடம் பற்று வைக்காமலே இருப்பர். 
பிறரிடமும் இதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க
மாட்டார்கள்.

8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்
பொருள்: அகிலத்தில் வாழும் மனிதர்களே!  எண்ணிறந்த வழிகள்
பொருள் தேடுவதற்கு இருந்தாலும், விதி நமக்கென்று
விதித்திருந்தாலன்றி எதுவும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை. 
கிடைத்தாலும் நிலைப்பதில்லை, எனவே நல்ல மரியாதையை
மட்டுமே விரும்பித் தேடிக் கொள்ளுங்கள்.

9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து
பொருள்:  பெருக்கெடுத்து ஓடிய நீர் வற்றி, கால் சுடும் அளவிற்கு
காய்ந்திருந்தாலும் ஆறானது தனது ஊற்று நீரால் உலகை ஊட்டி
வாழ்விக்கும்.  அதுபோலவே வறுமை அடைந்த போதும் நல்ல
குடியில் பிறந்தவர்கள் தகுந்தவர்களுக்கு இல்லை என்று சொல்ல
மாட்டார்கள்.

10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.
பொருள்:  மக்களே!  ஆண்டுகள் தோறும் அழுது புரண்டாலும்
இறந்தவர் மீண்டும் வரப்போவதில்லை.  நாமும் அவ்வழியிலேயே
போகப்போகிறோம்.  எனவே நாம் இருக்கும் வரை எந்தக்
கவலையும் கொள்ளாமல் பிறர்க்கும் கொடுத்து நாமும் உண்டு
இருப்போமாக.

11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
பொருள்: பெரும் துன்பத்தைத் தரும் என் வயிறே!  நீ ஒரு
நாளைக்கு உணவில்லையென்றாலும் பொறுத்துக் கொள்வதில்லை. 
கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்கு எடுத்துக் கொள்
என்றாலும் கேட்பதில்லை, என் கஷ்டத்தை அறியாத உன்னோடு
வாழ்வது பெரும் கடினம்.

12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
பொருள்:  அரசனும், ஆற்றங்கரையிலிருக்கும் மரங்களும் அறிய
வாழ்ந்த உயர் வாழ்வும் வீழ்ந்து விடும்.  ஆனால் உழவு செய்து
வாழ்வதற்கு என்றுமே வீழ்ச்சியில்லை.  வேறெந்த வேலைக்கும்
வீழ்ச்சி என்பது உண்டு.

13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்
பொருள்: இந்த புவியில் மெய்யாக வாழ இருப்பவரை யாரும்
அழிக்கவும் முடியாது, அழிய இருப்பவரைக் காக்கவும் முடியாது,
ஓயாது பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவரை விலக்கவும் முடியாது.

14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்
பொருள்:  பிச்சை எடுப்பதை விட மேலானது, பிறரை அண்டி
அவருக்கு இதமாகப் பேசி மானத்தை விட்டு வயிறு வளர்ப்பது. 
சீச்சீ, இதற்கு மானத்தைக் காத்துக் கொண்டு இறந்து போவதே
மேல்.

15. சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்
பொருள்: சிவனை நினைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளும் துன்பம்
என்பது இல்லை.  அதுவே அறிவிற்சிறந்த வழியாகும்,
மற்றவையெல்லாம் விதிப்படியே நடந்து விடும்.

16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி
பொருள்: இந்த உலகத்தில் நீரின் குணம் நிலத்தின் தன்மையை
சார்ந்தும், உயர்ந்தோர் குணம் அவர்கள் கொடையைச் சார்ந்தும்,
கண்களின் குணம் மாறாத கருணையாலும், பெண்களின் குணம்
அவர்கள் கற்பைச் சார்ந்தும் இருப்பதை பெரும் விஷயங்கள் என்று
அறிந்து கொள்.

17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
பொருள்: நாம் செய்த தீவினைகள் பல இருக்கும் போது
தெய்வத்தை நிந்திப்பதால் பெரும் பொருள் நம்மைத் தேடி வந்து
விடுமா?  வசதி இருக்கும் போது பாவம் தீரும் என்று கருதியாவது
பிறர்க்கு உதவி செய்யாதவர்க்கு, வெறும் பானை பொங்குவது
போலவே அவர் தேடும் செல்வமும்.

18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
பொருள்: இந்த உலகத்தில் கருமிகளாக இருப்பவர்கள், பெற்றோர்,
உடன்பிறந்தோர், நமது நாட்டவர், உறவினர்கள், நண்பர்கள் என
எவர் வந்து கெஞ்சினாலும் உதவ மாட்டார்கள்.  வேறு யாராவது
வந்து துன்புறுத்தினால்தான் கொடுப்பார்கள்.

19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்
பொருள்: இந்தப் பாழும் உடலையும், வயிற்றின் பசிக்
கொடுமையையும் த்ருப்தி செய்ய, ஒரு படி அரிசிக்காக நாம்
ஒருவனுக்கு சேவகம் செய்கிறோம், போய் பிச்சை கேட்கிறோம்,
கடல் கடந்து போகிறோம், தகுதியில்லாதவனை எல்லாம் பெரிதாக
பாவிக்கிறோம், போற்றிப் பாடி, அவன் கூறுவதற்கெல்லாம்
இசைகிறோம். 

20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்
பொருள்: விலை மாதர்களுடனான கொண்டாட்டம் இம்மை, மறுமை
இரண்டுக்குமே நல்லதன்று.  அம்மிக் கல்லைத் தெப்பமாக நம்பி
ஆற்றில் இறங்குவது போல, அது பெரும் செல்வத்தையும் அழித்து
நம்மை வெறுமைக்கு இட்டுச் சென்று விடும்.

21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்
பொருள்: சிவந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி
வஞ்சமில்லாதவர்க்கு நீர், தங்குமில்லம், நிலம் நிறைந்த உணவு,
சிறந்த பேர், புகழ், பெருமையான வாழ்வு, ஊருக்கே தேவையான
செல்வம், நீண்ட வாழ்நாள் இவை அனைத்தையும் தருகிறாள்.

22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
பொருள்:  பாடுபட்டுத் தேடிய பொருளை பிறர்க்குக் கொடுத்து
உதவாது புதையல் போல வைத்துப் பாதுகாக்கும் அறிவு கெட்ட
மனிதர்களே! பாவிகளே!  நீங்கள் இங்கிருந்து இறந்து போகும்
போது அந்தப் பணத்தை யார் அனுபவிக்கப் போகிறார்கள்?

23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
பொருள்: நீதிமன்றத்திலே ஒரு கட்சியின் சார்பாகப் பேசுபவர்
வீட்டில் பேய் புகுந்து விடும், பாழடைந்து வெள்ளெருக்கம்பூ பூத்து
விடும், பாதாளத்தில் பாயும் கொடிகள் படர்ந்து விடும், மூதேவி
சென்று வாழ்வாள், பாம்பு புகும்.

24. நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை
பொருள்:  திருநீரணியாத நெற்றியும், நெய்யில்லாத உணவும்,
ஆறில்லாத ஊரும், மாறுபாடில்லாத உடன்பிறப்பில்லாத உடலும்,
நல்ல மனைவியில்லாத வீடும் பாழே.

25. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
பொருள்: வரவுக்கு அதிகமாக செலவாகி விட்டால் மானம் அழியும்,
அறிவும் அழியும், போன திசையிலெல்லாம் திருடனைப் போலப்
பார்ப்பார்கள், ஏழு பிறவியிலும் தீயவனாகி விடுவோம்,
நல்லவர்களுக்கும் விரும்பாதவர்களாகி விடுவோம்.

26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
பொருள்:  நம் மானம், குலப்பெருமை, கல்வி, திறமை, அறிவு,
கொடை குணம், தவம், உயர்வு, நிர்வாக குணம், தேன் போலப்
பேசும் பெண்களின் மேல் கொண்ட காதல் இந்த பத்தும் பசி வந்து
விட்டால் பறந்து போய் விடும்.

27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
பொருள்: நாம் நினைக்கும் ஒன்று கிடைக்காமலே போகும், அல்லது
கிடைத்தாலும் கிடைத்து விடும், மற்றொன்று நினைக்கும் முன்பே
நமக்கு வந்து சேர்ந்தும் விடும், இவையெல்லாம் அந்த சிவன்
செயலே.

28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
பொருள்: சாப்பிடுவது ஒரு படி அரிசி, உடுப்பது நான்கு முழத்
துணி, ஆனால் நம் எண்ணங்களோ எண்பது கோடி,
கண்மூடித்தனமான இந்த மனித வாழ்க்கை மண்பானையைப் போல
சாகும் வரை துன்பம் தான்.

29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கன்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்
பொருள்: மரம் பழுத்து விட்டது, வா! என்று யாரும் இங்கு
வௌவாலை அழைப்பவரில்லை, பசுவானது, சுரக்கும் அமுதமான
பாலைக் கன்றுக்கு தருவது போல ஓயாது கொடுத்துக் கொண்டே
இருந்தால், இந்த உலகத்தவர் எல்லாம் நம்மிடம் உற்றாராகவே
இருப்பர்.

30. தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி
பொருள்: வேந்தே! அவரவர் முற்பிறப்பில் செய்த
வினைப்பயன்களை ப்ரம்மன் எழுத்துப்படியே அவரவர்
அனுபவிப்பர், தீயவர்களையெல்லாம் என்ன செய்ய முடியும்? 
எல்லாரும் சேர்ந்து வெறுத்தாலும் விதி போய் விடுமா என்ன?

31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி
பொருள்: குற்றமுள்ள பாட்டை விட வெறும் இசையே சிறந்தது. 
உயர்ந்த குலம் என்று சொல்லிக் கொள்வதை விட சிறந்த ஒழுக்கமே
மேலானது.  முறை தவறின வீரத்தை விட விடாத நோயே சிறந்தது.
பழிக்கு அஞ்சாத மனைவியை விட தனித்து வாழ்தலே சிறந்தது.

32. ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
பொருள்: மக்களே! செல்வமானது ஆற்றில் தோன்றும் மேடு,
பள்ளங்களைப் போன்று நிலையில்லாதது.  எனவே பிறர்க்கு
சோறும், நீரும் கொடுத்து தர்மம் செய்யுங்கள், அது உள்ளத்தில்
ஒழுக்கத்தை உயர்த்தி வளர்க்கும்.

33. வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
பொருள்: யானையைக் குத்திப் பாயும் வேல் கொம்பு பஞ்சில்
பாயாது.  நீண்ட இரும்பு கடப்பாறையால் பிளவு படாத கற்பாறை
பசு மரத்தின் வேரினால் பிளவு பட்டு விடும். எனவே கடும்
சொற்கள் இனிமையான சொல்லை வென்று விடாது.

34. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்
பொருள்: படிக்காதவன் ஆயினும் ஒருவனிடம் பொருள் வந்து
விடுமானால் எல்லாரும் அவனை சென்று போற்றி அழைப்பர். 
பொருளில்லாதவனை மனையாளும் விரும்ப மாட்டாள், மேலும்
ஈன்றெடுத்த தாயும் விரும்ப மாட்டாள், அவன் சொல்லுக்கும்
எங்கும் மதிப்பு இருக்காது.

35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு
பொருள்: பூக்காமலே காய்க்கும் மரமும் உண்டு, மக்களுள்
மற்றொருவர் கூறாமல் தானே உணர்ந்து செயல் செய்வோரும்
உண்டு, வேண்டி விதைத்தாலும் முளைக்காத விதையைப் போல
அறிவில்லாதவர்க்கு அடுத்தவர் சொன்னாலும் எந்த உணர்வும்
வராது.

36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்
பொருள்: ஒளி பொருந்திய வளையல்களை அணிந்தவளே! 
நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் தான் அழியும் காலம்
வந்தால் தான் கருவைப் பிறப்பிக்கின்றன.  அதுபோல அறிவு,
செல்வம், கற்ற கல்வி இவைகள் அழியும் காலம் வந்தாலே ஒருவர்
அயல் மாதர் மேல் பற்று கொள்கின்றனர்.

37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி
பொருள்: நெஞ்சே! கவலைப் படாதே, விதியை வெல்வதற்கு வேதம்
முதலான அனைத்து நூல்களிலும் ஒரு வழியும் இல்லை.  நாம்
நினைப்பதெல்லாம் நடப்பதுமில்லை, ஆனால் முக்தியை அடையும்
வழியில் இருப்பவர்க்கு விதி என்று ஒன்று இல்லை. 

38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
பொருள்: நல்லதென்றும், தீயதென்றும், தானென்றும், தனதென்றும்,
வேண்டியதென்றும், வேண்டாததென்றும் இரண்டற்று நிற்கும்
நிலையே தத்துவமாம்.  இதை விட மெய்ப் பொருள் என்ற ஒன்றை
வேறெங்கோ தேடுவது, சம்பா நெல்லை அறுத்தவர் அதைக்
கட்டுவதற்கு (அதிலேயே கயிறு திரித்துக் கொள்ளலாம்)
வேறெங்கோ கயிறைத் தேடுவது போன்றது.

39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு
பொருள்: முப்பது வயதாகும் அளவில் மண், பெண், பொன்
ஆசைகளை விடுத்து ஒருவன், மேலான இறையைத் தவறாமல்
தேடிப் பெறவில்லை என்றால் அவன் வளர்ச்சி பெண்களின்
முலையளவே ஆகும், கற்ற கல்வியும் கிளி கூறுவதையே கூறிக்
கொண்டிருத்தல் போலாகும்.

40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
பொருள்: தேவர் திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிவான
உபநிஷத்துக்களும், மூவர் மொழிந்த(அப்பர் சுந்தரர் சம்பந்தர்)
திருமறையும், மாணிக்க வாசகர் மொழிந்த திருக்கோவையும்,
திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் கூறுவது ஒரே
விஷயத்தைத்தான்.

Saturday, December 29, 2012

மூதுரை - ஔவை - 30

மூதுரை - ஔவை - 30
வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும்,
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும்
கிடைக்கும்

1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல்?' எனவேண்டாம் - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
பொருள்: ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும்,
நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. 
எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது
வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து
விடும்.  அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய
விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்
பொருள்: நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல்
எழுத்தைச் செதுக்குவது போன்றது.  அது எவரும் அறியும்
வண்ணம் என்றும் நிலைத்திருக்கும்.  அப்படியல்லாது
இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. 
அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி
நிலைக்காது போகும்.

3. இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள் பூத்தநன் மலரும் போலுமே
ஆளில்லா மங்கையர்க்கு அழகு
பொருள்: இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும்
பெற்றால் அதனால் துன்பமே.  அனுபவிக்க முடியாது.  அது
பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது.  அதைப்
போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

4. அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
பொருள்: நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள்.  நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு
எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. 
தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்
போன்றது அவர் நட்பு.

5. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா
பொருள்: கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில்
மட்டும் பழங்களைத் தரும்.  அது போல மேன்மேலும் முயன்றாலும்
நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன்
தரும்.

6. உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்
பொருள்: கல் தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால்
உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது.  அது
போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும்
தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.

7. நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்
பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ
அவ்வளவே வளரும்.  நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. 
முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது
அனுபவிக்கும் செல்வம்.  குணம் நாம் தோன்றிய குலத்தின்
அளவே.

8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
பொருள்: நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும்
அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை
மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும்
நல்லது.

9. தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது
பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்
கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில்
சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக்
கெடுதியே.

10. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
பொருள்:  உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும்
புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் பழமையான
உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்)
எல்லாருக்குமே பயனைத் தரும்.

11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி
ஏற்றம் கருமம் செயல்
பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே
ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை.  அது போலவே
பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர்
துணையின்றி முடிவதில்லை.

12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்
பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம்
தருவதில்லை.  ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல
வாசனையைத் தருகிறது.  பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட
உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று
குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது.  எனவே உருவத்தை வைத்து
ஒருவரை எடை போடக் கூடாது.

13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்
பொருள்: கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை
மரங்கள் அல்ல.  சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில்
எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை
அறியாதவனுமே மரம் போன்றவன்.

14. கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாக பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்
கல்லாதான் கற்ற கவி
பொருள்: காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே
தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத
சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன்
சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை.  விஷயமும்
இல்லை.

15. வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்க ஆகாரம் ஆனாற்போல பாங்கு அறியா
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்
பொருள்: புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும்
வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப்
போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும்
உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த
உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்.

16. அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடியிருக்குமாம் கொக்கு
பொருள்: நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக்
கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக்
கொண்டிருக்கும்.  எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை.
அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும்.  அதைக் கண்டு
அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.

17. அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு
பொருள்:  குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும்
பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு
விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர்.  அந்தக் குளத்திலேயே
அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல்
கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து
கொள்பவர்களே நம் உறவு.

18. சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?
பொருள்:  தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன்
சிதறலும் தங்கமே.  ஆனால் மண்பானை உடைந்து போனால்?
அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும்,
மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும்.

19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.
பொருள்:  தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை
முகவாது.  நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக்
கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே.  அது நம் முன்
ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.

20. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
பொருள்:  வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று
விடுகிறது.  எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு
என்று நினைக்க முடியாது.  உடன் பிறக்காது எங்கோ பெரிய
மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல, 
அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.

21. இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.
பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த
இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை.  ஆனால் அந்த
இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து
விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ
அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.

22. எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம்
சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன்
வினைப் பயனே.  விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக்
கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?

23. கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.
பொருள்:  சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட
கல்லைப் போலப் பிரிந்து விடுவர்.  பெரும் சினத்தால் பிரிந்தாலும்
பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். 
அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான
வடுவைப் போன்றதே.

24. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
பொருள்: குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை
சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். 
சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி
அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்

25. நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
பொருள்: தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து
வாழும்.  விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும்
வெளியில் திரிந்து கொண்டிருக்கும்.  அதைப் போலவே நெஞ்சில்
குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர்,
குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து
கொண்டிருப்பர்.

26. மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
பொருள்: ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக்
கற்றவனே மேலானவன்.  ஏனென்றால், அரசனுக்கு அவன்
தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை.  ஆனால்
கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

27. கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
பொருள்: கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத்
தரும்.  தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு
அதன் கன்று அழிவைத் தரும்.  வாழ்க்கைக்குப் பொருந்தி
நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

28. சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?
பொருள்:  தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம்
குறைவதில்லை.  அதைப் போலவே தாராள குணம் படைத்த
அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம்
மாறுவதில்லை.

29. மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.
பொருள்: ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும்,
அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப்
பெருமையும் லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவனுக்கு இருக்கும் வரையில்
தான்.  அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.

30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். 
பொருள்: தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும்
மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு
செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

Wednesday, December 5, 2012

வெற்றி வேற்கை - அதிவீர ராம பாண்டியன் - 82

வெற்றி வேற்கை (நறுந்தொகை)- அதிவீர ராம பாண்டியன் - 82, இவர் கொற்கை நகரத்து அரசர். இது ஒரு முத்து குளிக்குமிடம், துறைமுகம். இவர் தமிழ்ப் புலவரும். நைடதம், லிங்கபுராணம், காசிகாண்டம், வாயு ஸம்ஹிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் முதலியவை இவர் இயற்றிய மற்ற நூல்கள்.

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கு அணிவோமே.
பொருள்: ப்ரணவப் பொருளான, பெருந்தன்மையுள்ள விநாயகக் கடவுளின் பாதமலர்களை தலையில் சூட்டிக் கொள்வோமாக.

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குல சேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவில் லாதவரே.
பொருள்: வெற்றி தரும் வேலை கையில் கொண்ட, கொற்கை நகரத்தை ஆளும், குலத்திற்கு சிகரம் போன்ற அதிவீர ராமனாகிய நான் கூறியுள்ள நல்ல தமிழினால் ஆன இந்த நறுந்தொகையினால் தம் குற்றங்களை நீக்கிக் கொள்வோர் குறைவில்லாத வாழ்வார்களாக.

1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் - கல்வி கற்பித்த ஆசான் இறைவன் ஆவான்
2. கல்விக்கு அழகு கசடற மொழிதல் - குற்றமின்றி பேசுதலே கற்ற கல்விக்கு அழகு.
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் - சுற்றத்தோடு கூடிய பெருங்குடும்பத்தை வகிப்பதே செல்வர்க்கு அழகு
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் - வேதம் ஓதுவதும், ஒழுக்கத்தோடு இருப்பதுமே ப்ராம்மணர்களுக்கு அழகு.
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை - நீதி தவறாது முறையோடு அரசு செய்வதே அரசர்க்கு அழகு.
6. வைசியர்க்கு அழகு வளர்பொருள் ஈட்டல் - குன்றாத செல்வத்தை சேர்ப்பதே வைச்யர்க்கு அழகு
7. உழவர்க்கு அழகு இங்குஉழுது ஊண் விரும்பல் - விவசாயம் செய்து உண்பதே உழவர்க்கு அழகு
8. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் - வரப்போவதை முன்கூட்டியே ஆராய்ந்து உரைப்பதே மந்திரிக்கு அழகு
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை - அஞ்சாமையும், வீரமுமே தளபதிக்கு அழகு.
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் - விருந்தினரோடு உண்பதே உணவிற்கு அழகு
11. பெண்டிற்கு அழகு எதிர் பேசாதிருத்தல் - எதிர்த்துப் பேசாமலிருப்பதே பெண்களுக்கு அழகு
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல் - கணவனைப் பார்த்துக் கொள்வதே குடும்பப் பெண்ணுக்கு அழகு
13. விலைமகட்கு அழகு தன்மேனி மினுக்குதல் - உடலைப் பிறர் கவரும் வண்ணம் அலங்கரித்துக் கொள்வது விலைமாதர்க்கு அழகு
14. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் - கல்வி பயின்று, ஆய்ந்தறிந்த அறிஞர்க்கு அழகு அடக்கமாக இருப்பது.
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை - வறுமையில் வாடும்போதும் ஒழுக்கமாக இருப்பது வறியவர்களுக்கு அழகு
16. தேம்படு பனையின் திரள் பழத்து ஒருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழலாகாதே
பொருள்: சுவைமிக்க பெரும் பழத்தின் விதையில் வானுயர வளர்ந்தாலும், பனைமரம் ஒருவருக்கும் நிழல் தராது.
17. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவிஆள் பெரும் படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே.
பொருள்: ஆலமரத்தின் சிறிய பழத்தின் விதை, தெளிந்த நீர்கொண்ட குளத்து மீனின் முட்டையை விட சிறியதே ஆயினும், பெருமை மிக்க யானை, அலங்கரித்த தேர், காலாட்படையோடு கூடின மன்னர்க்கு நிழல் தரும்.
18. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் - உருவத்தில் பெரியவராக இருப்பவரெல்லாம் பெரியவர்கள் இல்லை.
19. சிறியோர் எல்லாம் சிறியரும் இல்லர் - உருவத்தில் சிறியவராக இருப்பவரெல்லாம் சிறியவர்கள் இல்லை.
20. பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர் - நாம் பெற்ற எல்லா பிள்ளைகளுமே பிள்ளைகளாக இருக்க மாட்டார்கள்.
21. உற்றோரெல்லாம் உறவினர் அல்லர் - எல்லா உறவினரும் உண்மையில் உறவினர் இல்லை.
22. கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர் - மணம்புரிந்து கொண்ட எல்லாரும் மனைவிகள் அல்ல
23. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது - சுண்டக் காய்ச்சினாலும், பசுவின் பால் சுவை குறையாது.
24. சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது - நெருப்பிலிட்டு வாட்டினாலும் சுத்தமான பொன் ஒளி குறையாது
25. அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது - நன்றாக அரைத்தாலும் சந்தனத்தின் மணம் குறைவதில்லை
26. புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது - எவ்வளவு புகைத்தாலும் கரிய அகில்கட்டை துர்மணம் வீசாது
27. கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது - எவ்வளவு கலக்கினாலும் குளிர்ந்த கடல் சேறு ஆகிவிடாது.
28. அடினும் பால்பெய்து கைப்பு
அறாது பேய்ச் சுரைக்காய்
பால் விட்டுக் காய்ச்சினாலும், பேய்ச்சுரைக்காய் கசப்பு நீங்காது
29. ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது - பலவித வாசனைகளை சேர்த்தாலும், உள்ளிப்பூண்டு நறுமணம் வீசாது
30. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே - நம் நடத்தையால் தான் நமக்கு மேன்மையும், கீழ்மையும் வரும்
31. சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்
பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே
சிறியவர்கள் செய்யும் சிறு, சிறு பிழைகளையெல்லாம் பெரியவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்
32. சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்
பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே
சிறியோர் செய்யும் பிழைகள் பெரிதாக இருந்தால், பெரியோர்கள் அதை பொறுத்துக் கொள்ளல் அரிது.
33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே
நூறாண்டுகள் பழகியிருந்தாலும் முரடர்களின் நட்பு நிலைக்காது.  அது நீரிலிருக்கும் பாசி போல் வேர் ஊன்றாது.
34. ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்குமே
ஒருநாள் பழகியிருந்தாலும் பெரியோரின் நட்பு, நிலத்தைப் பிளந்து செல்லும் வேர் போல ஊன்றிடும்
35. கற்கை நன்றெ கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பிச்சையெடுத்தாவது கல்வி கற்பதே நல்லது
36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகுமே
கல்வியறிவில்லாத ஒருவன் தன் குலப்பெருமை பேசுவது நெல்லுக்கு நடுவே தோன்றும் குப்பைச் செடி போன்றது.
37. நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே
நான்கு வர்ணங்களில் மேல் வர்ணத்தவனான ஒருவன் கல்லாதவனாக இருந்தால் அவன் கடையனே
38. எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வருக என்பர்
கற்றவர்கள் எந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை மற்ற கற்றவர்கள் மேலே வரவேற்று ஏற்றுக் கொள்வார்கள்
39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் - அறிஞனை அரசனும் விரும்புவான்
40. அச்சம் உள்ளடக்கி அறிவு அகத்துஇல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்றே
பயந்தாங்கொள்ளியான, அறிவில்லாத, உபயோகமற்ற பிள்ளைகளைப் பெறுவதை விட ஒரு குடும்பம் சந்ததியே இல்லாமலிருப்பதே மேல்.
41. யானைக்கு இல்லை தானமும், தர்மமும் -  நீளமான கையிருந்தும் யானை தான, தர்மம் செய்வதில்லை.
42. பூனைக்கு இல்லை தவமும் தயையும் - கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் பூனை தவமும், தயையும் கொள்வதில்லை
43. ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும் - மெய்யறிவுள்ளோர்க்கு இன்ப, துன்பங்களில்லை
44. சிதலைக்கு இல்லை செல்வமும், செருக்கும் - செல்வத்திலும், சுவடிகளிலுமே இருந்தாலும் கரையானுக்கு அதனால் பணவசதியும், கர்வமுமில்லை. அது இரண்டையுமே அழித்து விடும்
45. முதலைக்கு இல்லை நீத்தும் நிலையும் - ஓட்டமோ, நிலைத்ததோ. முதலைக்கு எல்லா நீரும் ஒன்றுதான். எங்கும் அது மூர்க்கமாகவே இருக்கும்
46. அச்சமும் நாணமும் அறிவு இல்லோர்க்கு இல்லை - கல்லார்க்கு எதைப் பற்றியும் பயமோ, வெட்கமோ இல்லை
47. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை - வசதியில்லாதவர்க்கு எல்லா நாளும் ஒன்றுதான்
48. கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை - கெட்டவர்களுக்கு நட்பும், சுற்றமும் இல்லை
49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா - செல்வமும், வறுமையும் ஓரிடத்திலேயே இருக்காது
50. குடைநிழலில் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர்
யானைமீதமர்ந்து வெண்கொற்றக்குடையின் கீழ் சென்றோரும், பிழைப்புக்காக வேற்றூருக்கு தள்ளாடி நடந்தே செல்ல நேரிடும்.
51. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்
சிறப்பும் செல்வமும் பெருமையும் உள்ளவர்களும் உணவிற்கு தர்ம சத்திரத்தை அடையும் காலம் வரலாம்.
52. அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்
பிறர் தர்மத்திற்காக இடும் பிச்சையை கேட்டு வாங்கி உண்போரும் அரசராகும் காலம் வரலாம்
53. குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றே பகலே அழியினும் அழிவர்
இரு பெரு மலையளவு செல்வம் உள்ளவர்களும் ஒரே பகலில் அழிந்தாலும் அழிந்து விடுவர்
54. எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்
ஏழடுக்கு மாட மாளிகையும் அடியோடு சாய்ந்து கழுதை மேயும் பாழ் நிலமானாலும் ஆகும்.
55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்
காளை மாடும், கழுதையும் மேய்ந்து கொண்டிருந்த பாழ்நிலமும், பொன் வளையல்கள் அணிந்த மகளிரும், ஆண்களும் கூடி வாழும் நெற்குவியல் மிக்க பெரு நகரமானாலும் ஆகலாம்.
56. மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
பிண அணி அணிந்து தம்கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடியாக
முடிந்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
கல்யாண ஆடை அணிந்த மகளிரும் அன்றே அதே ஆடை கோடி ஆடையாகி விதவைக் கோலம் பூண்டு, தன் கணவனைத் தழுவி முடிந்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர்.
57. இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே - இல்லாதவர் பிச்சை கேட்பது இயற்கையே
58. இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே - இல்லையென்று பிச்சையெடுப்பவர்க்கு பிச்சையிடுவது செல்வம் உடையவர்க்குக் கடமையே.
59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே
பூமியும், வானும் அடைந்தாலும் மனையாள் இல்லாதவர் ஒன்றும் இல்லாதவரே
60. தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறுகண் மூங்கில் கோற்கு அஞ்சுமே
அச்சமில்லாத பெரிய யானையும், சிறு கணுக்களை உடைய மூங்கில் கோலுக்கு அஞ்சும்.
61. குன்றுடை நெடும் காடு ஊடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சுமே
மலைகளோடு கூடிய பெருங்காட்டில் வாழ்ந்தாலும், சிறுதலை உடைய மானானது புலிக்கு அஞ்சும்
62. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிக அஞ்சுமே
ஆரைப்பூண்டு மிகுந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் தேரைக்கு பாம்பென்றால் பயமே.
63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும்புலி வாழும் காடு நன்றே
கொடுங்கோல் ஆட்சி செய்யும் நாட்டை விட, கடும் புலி வாழும் காடு நல்லது.
64. சான்றோர் இல்லா தொல் பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே
சான்றோர் இல்லாத பழைய ஊரை விட, தேனைத் தேடித் திரியும் குறவர் நாடு நல்லது
65. காலையும் மாலையும் நான்மறை ஓதா
அந்தணர் என்பர் அனைவரும் பதரே - இருவேளையும் வேதம் ஓதாத அந்தணர் பதரே
66. குடி அலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே
இறைவனுக்கு ஒப்பான அரசனும், குடிமக்களை வருத்தி அவர் பொருள் பறித்து கொடுங்கோலாட்சி செய்தால் அந்த மூர்க்கனும் பதரே
67. முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே
மூலதனம் இருந்தும் அதனால் வாணிபம் செய்து உண்ணாத வணிகரும் பதரே
68. வித்தும் ஏரும் உளவா இருப்ப
எய்த்து அங்கிருக்கும் ஏழையும் பதரே
விதையும், ஏரும் தயாராக இருந்தும், அதனைக் கொண்டு உழவாத சலித்திருக்கும் உழவனும் பதரே
69. தன் மனையாளைத் தாய் மனைக்கு அகற்றிப்
பின்பு அவள் பாராப் பேதையும் பதரே
மனைவியை அவள் தாய் வீட்டுக்குத் துரத்தி விட்டு, திரும்பியும் பார்க்காத மடையனும் பதரே.
70. தன் மனையாளைத் தனி மனை இருத்தி
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே.
மனைவியைத் தனியே வீட்டில் விட்டு விட்டு, அடுத்தவளைத் தேடும் மடையனும் பதரே
71. தன் ஆயுதமும் தன் கையிற் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே
தொழிலுக்கு வேண்டிய தன் கருவியையும், தன் செல்வத்தையும் அடுத்தவனிடம் கொடுக்கும் மடையனும் பதரே
72. வாய்ப் பறையாகவும் நாக்கு அடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்
வாயையே பறையாகவும், நாக்கை அடிக்கும் கோலாகவும் கொண்டு அறிவுரை கூறும் சான்றோர் கூற்றைப் போற்றி கேட்க வேண்டும்
73. பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே
சொல் வன்மையுடைய ஒருவன் சொல்லும் பொய்யும் மெய் போலவே தோன்றும்
74. மெய்யுடை ஒருவன் சொல்ல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே
பேச்சுத் திறமையில்லாத ஒருவன் சொல்லும் மெய்யும் பொய் போலவே தோன்றும்
75. இருவர் தம் சொல்லையும் ஏழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கிழந்தவர் தாம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும்மே
இருதரப்பினர் கூறுவதையும் பலமுறைக் கேட்டும், இருவரும் ஒப்ப நீதி கூறாவிடில், வழக்கில்  தோல்வியுற்றவர் மனமாற அழும் கண்ணீர் நீதி உரைப்பவர் தலைமுறைகளையும் மும்மூர்த்திகளும் முறையாகக் காத்தாலும் அழித்துவிடும்
76. பழியா வருவது மொழியா தொழிவது - நமக்குப் பழிவரும் எந்த சொல்லையும் சொல்லாது விட்டொழிக்க வேண்டும்
77. சுழியா வருபுனல் இழியா தொழிவது - சுழலாக வரும் நீர் வெள்ளத்தில் இறங்கக் கூடாது
78. துணையோடு அல்லது நெடுவழி போகேல் - தனியாகத் தொலைதூரப் பயணம் செய்யக் கூடாது.
79. புணைமீது அல்லது நெடும்புனல் ஏகேல் - தெப்பத்தின் மேல் செல்லாமல், நீண்ட பெரும் நீரோட்டத்தில் நீந்தக் கூடாது.
80. எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே.
அழகான தனங்களையும், மை தீட்டிய கண்களையும் கொண்ட மாதர் தந்திரங்களில் மயங்கித் தகாத கொடுங்கார்யங்களில் இறங்கக் கூடாது
81. வழியே ஏகுக வழியே மீளுக - நல்ல நேர்மையான வழியிலேயே சென்று, வர வேண்டும்
82. இவை காண் உலகிற்கு இயலாம் ஆறே - இவையே உலகில் நடந்து கொள்ளும் முறை.

உலகநீதி - உலகநாதன் - 13

உலகநீதி - உலகநாதன் - 13
உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
உலகநீதி எனும் இப்புராணத்தை உரைப்பதற்கு கலைகளின் உருவாய் இருக்கும் யானை முகனே துணை
1. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.
பிறர்மீது பழி கூறக்கூடாது. அம்மாவை மறக்கக்கூடாது. தீயவர்களோடு சேரக்கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது.வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, வலிமை பெற்ற முருகப் பெருமானை போற்றுவாய் மனமே.

2. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: தெரிந்தே பொய் கூறக்கூடாது. நடக்காது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்த முயலக் கூடாது. பாம்போடு விளையாடக்கூடாது. பண்பு இல்லாரோடு பழகக்கூடாது. தனியாக ஒருவரும் இல்லாத வழியில் செல்லக் கூடாது. பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. மனமே! மலைநாட்டின் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.

3. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: மனம் விரும்புவதையெல்லாம் செய்யக் கூடாது. பகைவனை உறவென்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச்சேர்த்து, பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது.  தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது. துன்பத்தில் முடியும் கோபத்தை கொள்ளக்கூடாது.  கோபத்தோடு இருப்பவரிடம் செல்லக்கூடாது.  மனமே! காட்டில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, முருகப் பெருமானை போற்றுவாய்.

4. குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
பொருள்: பிறரிடம் எப்போதும் குற்றங்களையேப் பார்க்கக் கூடாது. கொலை, திருட்டு செய்பவரோடு சேரக்கூடாது. படித்தவர்களை இகழக்கூடாது. பிறன் மனைவியை நினைக்கக் கூடாது.  ஆட்சிசெய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது. மனமே! வள்ளி மணவாளனான, மயில் வாகனனான, நிகரில்லாத முருகப் பெருமானை போற்றுவாய்.

5. வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: மனையாளோடு வாழாமல் பிறபெண்களைத் தேடி அலையக் கூடாது. மனைவியைக் குறை கூறக்கூடாது. தீய பழக்கங்களில் விழுந்து விடக் கூடாது. கடும்போரில் பின்வாங்கி ஓடக்கூடாது.  கீழானவர்களோடு சேரக்கூடாது.  அவர்களைக் குறை கூறக் கூடாது. மனமே! பெருவாழ்வு வாழும் குறவர் மகளான வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

6. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே
பொருள்: பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர் பேச்சைக் கேட்க வேண்டாம். நம்மை மதிக்காவர்கள் இல்லத்திற்கு செல்லக் கூடாது. அனுபவஸ்தர்களான பெரியோரின் அறிவுரைகளை மறக்கக் கூடாது.  எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரோடு சேரக் கூடாது.  கல்வியறிவு தந்த ஆசிரியர் சம்பளத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது.  திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது. மனமே! வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

7. கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.
பொருள்: எண்ணித் திட்டமிடாமல் கார்யங்களை செய்யக் கூடாது. நம் நஷ்டங்களை பிறரிடம் கூறக்கூடாது.  போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது.  புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடாது.  இரண்டாம் மணம் புரியக் கூடாது.  எளியார் என்று பகைமை கொள்ளக் கூடாது.  நெஞ்சே! தினைப் புனம் காக்கும் ஏழைப் பங்காளன் குமரவேள் பாதத்தைப் போற்று.

8. சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: தகாத இடங்களுக்குப் போகக் கூடாது.  ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது.  எல்லாரையும் பற்றி கோள் சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.  நமக்கு வேண்டியவர்களை அலக்ஷ்யமாய்ப் பேசக்கூடாது.  பெருமை தரும் கார்யங்களைத் தவிர்க்கக் கூடாது.  கெட்ட செயல்களுக்குத் துணை போகக் கூடாது. நெஞ்சே! பெருமை பெற்ற குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

9. மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: நிலத்திலேயே வாழ்ந்து கொண்டு நிலத்தகராறில் ஒருசார்பாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது.  மனம் சலித்து எவரோடும் சண்டை செய்யக் கூடாது.  நம் துயரை எவரிடமும் அழுது தெரிவிக்கக் கூடாது.  பார்க்காத ஒன்றைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கூறக்கூடாது.  பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது.  கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேரக்கூடாது.  நெஞ்சே!  உலகளந்த விஷ்ணுவின் தங்கையான உமையாளின் மைந்தன், மயிலேறும் நம் தலைவன் முருகப் பெருமானைப் போற்று.

10. மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே.
பொருள்: வீண்பேச்சு பேசி வலுச்சண்டை தேடுபவரோடு சேரக்கூடாது.  பொய் சாக்ஷி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது.  தெய்வத்தை மறக்கக்கூடாது.  இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது.  நம்மை ஏசிய உற்றாரிடம் உதவி கேட்கக்கூடாது. மனமே! குறி கூறும் குறவள்ளி மணவாளன், முருகப் பெருமான் நாமத்தைக் கூறுவாய்.

11. அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.
பொருள்: ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது.  வண்ணான், க்ஷவரத் தொழில் செய்பவன், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்யார், ப்ரஸவம் பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்திய மருத்துவன் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?

12. கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
பொருள்: ஒரு குடும்பத்தைப் பிளவு செய்து கெடுக்கக் கூடாது.  கண்ணில் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே வேலையாகக் கொள்ளக் கூடாது.  தீயவர் நட்பு கூடாது.  தெய்வத்தை இகழக்கூடாது.  பெரியோரை வெறுக்கக் கூடாது.  நெஞ்சே!  குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய்.

13. ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.
பொருள்: பலரைப் போற்றி, பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலகநீதியை உண்மையாய்ப் பாடிவைத்தேன்.  இதனை விரும்பி, பொருள் தெரிந்து, நாள்தோறும் கற்றோரும், கேட்டோரும் பூலோகம் உள்ளளவும் களிப்போடும், புகழோடும் வாழ்வார்களாக.

கொன்றை வேந்தன் - ஔவையார் - 91

கொன்றை வேந்தன் - ஔவையார் - 91
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
கொன்றைப் பூமாலையை அணிந்திருக்கும் சிவபெருமானின் செல்வனாகிய வினாயகக் கடவுளை என்றும் போற்றி வணங்குவோம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று - கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
3. இல்லறமல்லது நல்லறமன்று - இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு - குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் - ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
8. ஏவா மக்கள் மூவா மருந்து - செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
9. ஐயம் புகினும் செய்வன செய் - பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு - ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் - ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு - பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு - சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை - கணவன் சொல்லுக்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு
15. காவல்தானே பாவையர்க்கு அழகு - காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற - நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு
17. கீழோராயினும் தாழ உரை - உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் - பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே
20. கெடுவது செய்யின் விடுவது கருமம் - நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை - தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி - கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி - தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு - கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை - எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை - மலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு - பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு - தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே
29. சீரைத்தேடின் ஏரைத் தேடு - புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் - எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.
31. சூதும் வாதும் வேதனை செய்யும் - சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் - தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு - காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் - பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் - பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் - சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும்
38. தாயிற் சிறந்த ஒரு கோயிலு மில்லை - தாயே சிறந்த தெய்வமாகும்
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்
40. தீராக் கோபம் போராய் முடியும் - கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும்.  இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு - கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் - எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் - தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் தவமும் அழிந்து போம்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் - பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு - தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது - பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல் - நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் - நல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை - நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை - சொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு
51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு - நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி - சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்
53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு - நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை - நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
55. நேரா நோன்பு சீர் ஆகாது - மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் - சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் - சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை - உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் - ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் - சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்
61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் - அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும் - தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்
63. புலையும், கொலையும் களவும் தவிர் - புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் - கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் - ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் - அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
67. பையச் சென்றால் வையந் தாங்கும் - நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் - அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு
69. போனகம் என்பது தானுழுது உண்ணல் - தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் - தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை - மழையின்றி ஒன்றும் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை - மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது - மாலுமி இல்லாத ஓடம் செல்லாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு - மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
77. மேழிச் செல்வம் கோழைப் படாது - கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது
78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு - விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் - பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்
80. மோனம் என்பது ஞான வரம்பு - மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் - சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் - மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்
83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் - விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் - வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல் - யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு - உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை - தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை - அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு - தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு
90. ஒத்த இடத்து நித்திரை கொள் - பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் - படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.

ஆத்திச்சூடி - ஔவையார் - 108

ஆத்திச்சூடி - ஔவையார் - 108

ஆத்திச் சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.
- அத்திப்பூவனிந்திருக்கும் சிவனின் பிள்ளையாரை தொழுவோம் நாம்

1. அறம்செய விரும்பு - அறம்(தர்மமான, ந்யாயமான செயல்கள்) செய்ய விரும்பு (ராமன், யுதிஷ்ட்ரன்)
2. ஆறுவது சினம் - கோபத்தை அடக்கு (விச்வாமித்ரர், ஏகநாதர்)
3. இயல்வது கரவேல் - இயன்ற உதவியை செய்யாமலிருக்காதே(நீலகண்ட நாயனார், பட்டினத்தார்)
4. ஈவது விலக்கேல் - ஈகையை(தான, தர்மங்கள்) விட்டுவிடாதே (கர்ணன், கடையெழு வள்ளல்கள்)
5. உடையது விலம்பேல் -  உன் உடைமைகளைப்(நக்ஷத்ரம், சொத்து, குடும்ப ரஹஸ்யங்கள் போன்றவை) பற்றி யாரிடமும் சொல்லாதே (நிகும்பலா யாகம், துரியோதனன் காந்தாரியிடம் செல்லும்போது க்ருஷ்ணனை சந்தித்தது)
6. ஊக்கமது கைவிடேல் - தடைகளைக் கண்டு உற்சாகத்தை விட்டு விடாதே (ஹரிச்சந்த்ரன்)
7. எண்ணெழுத் திகழேல் - அறிவியலாராய்ச்சிக்கு அடிப்படையான எண்ணையும், இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான எழுத்தையும் இகழாதே.  இவற்றைக் கற்றுத் தேர். (பூரி ஆச்சார்யாள், ரிஷிகள்)
8. ஏற்ப திகழ்ச்சி - யாசிப்பது இகழ்வானது.
9. ஐயமிட் டுண் - பிறர்க்கு உணவிட்டு நீ உண்.
10. ஒப்புற வொழுகு - உலகத்தின் போக்கோடு ஒத்து வாழ்.
11. ஓதுவ தொழியேல் - கல்வி எல்லையில்லாதது. கற்றுக் கொண்டேயிரு.
12. ஔவியம் பேசேல் - கொள் சொல்லாதே
13. அஃகஞ் சுருக்கேல் - அளவைக் குறைத்து விற்பனை செய்யாதே.
14. கண்டொன்று சொல்லேல் - கண்டதை விட்டு வேறொன்றை சொல்லாதே. திரித்துக் கூறுதல்.
15. ங போல்வளை - உலகின் நெளிவு, சுளிவுகளை அனுசரித்து நடந்து கொள்.
16. சனி நீராடு - சனிக்கிழமைகள் தோறும் எண்ணை தேய்த்துக் குளி
17. ஞயம்பட உரை - ஏற்கும் வகையில் இனிமையாக உரை
18. இடம்பட விடேல் - தேவைக்கு அதிகமாக இடம் விட்டு வீட்டைக் கட்டாதே. (பராமரிக்கக் கடினமாகப் போகும்)
19. இணக்கமறிந்து இணங்கு - ஆராய்ந்த பின் நட்பு கொள்.
20. தந்தை தாய் பேண் - தாய், தந்தையரை அன்போடுக் காப்பாற்று.
21. நன்றி மறவேல் - செய்த நன்றியை மறந்து விடாதே.
22. பருவத்தே பயிர்செய் - காலமறிந்து பயிரை விதை. (கார்யத்தைத் தொடங்கு)
23. மண்பறித் துண்ணேல் - பிறர் நிலத்தை அபகரித்து, அதனால் வாழ்க்கை நடத்தாதே.
24. இயல்பலாதன செயேல். - இயற்கைக்கு மாறாக செயல்படாதே. (ஸ்வதர்மம்)
25. அரவம் ஆடேல் - பாம்புடன் விளையாடாதே.
26. இலவம் பஞ்சில் துயில் -  இலவம் பஞ்சில் செய்த படுக்கையில் உறங்கு. (குளிர்ச்சியானது, ம்ருதுவானது)
27. வஞ்சகம் பேசேல் - தீய்மையான, பொய்யான வார்த்தைகளை பேசாதே
28. அழகலாதன செயேல் - இழிவான, உன்னைத் தாழ்மை படுத்தும் செயல்களை செய்யாதே
29. இளமையில் கல் - கவலையில்லாத, எளிதில் பதியும், துடிப்பான இளமைப் பருவத்தில் பயில்.
30. அரனை மறவேல் - சிவபெருமானைத் தொழு. அவனை மறக்காதே.
31. அனந்தம் ஆடேல் - கடலில் விளையாடாதே
32. கடிவது மற - கோபத்தை மறந்தே விடு.
33. காப்பது விரதம் - உயிர் காப்பதை விரதமாக, நோன்பாகக் கொள்.
34 கிழமைப் பட வாழ் - உன் வாழ்க்கை எவர்க்கும் உபயோகப்படுமாறு வாழ்.
35. கீழ்மை அகற்று - தாழ்மையான செயல்களை உன் வாழ்க்கையிலிருந்து அகற்று.
36. குணமது கைவிடேல் - நீ எப்படி இருக்க வேண்டுமோ அந்த குணத்தை விட்டு விடாதே.
37, கூடிப் பிறியேல் - ஆய்ந்து சேர்ந்தவர்களைப் பிரிந்து விடாதே.
38. கெடுப்பது ஒழி - தீங்கு செயல்களை செய்யாதே
39 கேள்வி முயல் - அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்
40. கைவினை கரவேல் - உனக்குத் தெரிந்த கைத்தொழிலை விட்டு விடாதே
41. கொள்ளை விரும்பேல் - பிறர் பொருளை விரும்பாதே
42. கோதாட்டு ஒழி - தீங்கான விளையாட்டுகளில் ஈடுபடாதே.
43. சக்கர நெறி நில் - அரசாங்க வழிப்படி நட.
44. சான்றோர் இனத்திரு - நல்லவர் கூட்டத்தோடு இரு.
45, சித்திரம் பேசேல் - கற்பனையான பொய் வார்த்தைகளைப் பேசாதே.
46. சீர்மை மறவேல் - உன்னை உயர்த்தும் ஒழுக்கமான செயல்களை மறக்காதே
47, சுளிக்க சொல்லேல் - பிறர் வெறுக்கும்படியான வார்த்தைகளை சொல்லாதே
48, சூது விரும்பேல் - ஏமாற்றும், ஏமாறும் சூதாட்டங்களில் ஈடுபடாதே
49. செய்வன திருந்தச் செய் - செய்யும் செயல்களைக் குறையின்றி செய்
50. சேரிடம் அறிந்து சேர் - நாம் இருக்க வேண்டிய நல்லோர் இடம் இதுதானா என்பதை அறிந்து சேர்.
51. சை எனத்திரியேல் - பிறர் சீ என வெறுக்கும்படி நடவாதே
52. சொல் சோர்வு படேல் - நீ தளர்வடையும்படியான தேர்வு செய்யாத வார்த்தைகளை உபயோகிக்காதே
53. சோம்பித் திரியேல் - வேலையின்றி, அதுபற்றி கவலையுமின்றி சோம்பேரித்தனமாக இருக்காதே.
54. தக்கோன் எனத்திரி - தகுதியானவனாக நடந்து கொள்
55. தானமது விரும்பு - தான கார்யங்களைச் செய்வதை விரும்பு
56. திருமாலுக்கு அடிமை செய் - திருமாலுக்குத் தொண்டு செய்.
57. தீவினை யகற்று - தீச்செயல்களைச் செய்யாதே
58. துன்பத்திற்கு இடங்கொடேல் - துன்பத்தில் ஆழ்த்தும் செயல்களைச் செய்து விடாதே. துன்பத்தை ஆராய்ந்து கொண்டே இருக்காதே
59. தூக்கிவினை செய் - சிந்தித்து செயல்படு.
60. தெய்வம் இகழேல் - கடவுள் நிந்தனை செய்யாதே
61. தேசத்தோடு ஒத்து வாழ் - ஊரோடு ஒத்து வாழ்
62. தையல் சொல் கேளேல் - சிறு விஷயங்களை பொருட்படுத்தும், இவ்வுலக சுகங்களில் ஆசை கொள்ளும் குணத்தையே இயல்பாகக் கொண்ட பெண்கள் சொல்லை கேட்காதே
63, தொண்மை மறவேல் - உன் உயர்வான வரலாற்றை மறவாதே.
64. தோற்பன தொடரேல் - தோல்வி நிச்சயம் என்று தெரிந்த செயல்களைச் செய்யாதே
65. நன்மை கடைபிடி - நல்ல கார்யங்கள் செய்வதை விட்டு விடாதே
66, நாடு ஒப்பன செய் - நாட்டு நன்மையில் முடியும் கார்யங்களைச் செய்
67, நிலையில் பிரியேல் - உயர்வான உன் நிலையிருந்து இறங்கி விடாதே.
68. நீர்விளை யாடேல் - தண்ணீரில் விளையாதே
69. நுண்மை நுகரேல் - தீங்கான உணவுகளை உட்கொள்ளாதே
70. நூல் பல கல் - பல நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக் கொள்
71. நெற்பயிர் விளை - நெல் பயிரை விவசாயம் செய்
72. நேர்பட ஒழுகு - நேர்மையாக நடந்து கொள்
73, நைவினை நணுகேல் - அழிவுச் செயல்களின் பக்கம் போகாதே
74. நொய்ய உரையேல் - பயனில்லாத சொற்களைப் பேசாதே
75. நோய்க்கு இடங்கொடேல் - வ்யாதி வராமல் உடலைப் பார்த்துக் கொள்
76. பழிப்பன பகரேல் - பிறர் பழிக்கும் வார்த்தைகளை கூறாதே
77. பாம்போடு பழகேல் - பாம்போடு பழகாதே
78. பிழைபடச் சொல்லேல் - குற்றமில்லாமல் கருத்துகளையும், வார்த்தைகளையும் பேச வேண்டும்
79. பீடுபெற நில் - பெருமையடையும் விதத்தில் நடந்து கொள்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் - புகழ் பெற்ற பெரியோரைப் போற்றி, அந்த வழியில் நட
81. பூமி திருத்தி உண் - பூமியை சீர் செய்து, விவசாயம் செய்து உண்
82. பெரியோரை துணை கொள் - பெரியவர்களை எப்போதும் துணையாக வைத்துக் கொள்
83. பேதைமை யகற்று - அறியாமையை அகற்றிக் கொள்
84. பையலோடு இணங்கேல் - தீய சிறுவர்களோடு சேராதே
85. பொருள்தனை போற்றி வாழ் - வீண் செலவின்றி, பொருள்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்
86. போர்த் தொழில் புரியேல் - சண்டை, சச்சரவுகளிலே காலத்தைக் கழிக்காதே
87. மனந் தடுமாறேல் - எந்நிலையிலும் மனத்தைத் தளர விடாதே
88. மாற்றானுக் கிடங்கொடேல் - பகைவனையே உள்ளே விடாதே
89. மிகைபடச் சொல்லேல் - ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லாதே.
90. மீதூண் விரும்பேல் - அளவுக்கு மிகுதியாக உண்ணாதே
91. முனை முகத்து நில்லேல் - சண்டை, சச்சரவுகளிலேயே குறியாக இருக்காதே
92. மூர்க்கரோடு இணங்கேல் - யோசனையில்லாத முரடர்களோடு சேராதே
93. மெல்லினல்லாள் தோள்சேர் - மென்மையான குணமுடைய நல்லவளை மணந்து கொள்
94. மேன்மக்கள் சொல்கேள் - உயர்ந்தோர் சொல்கேள்
95. மைவிழியார் மனையகல் - ஒழுக்கமில்லாத பெண்கள் இருக்குமிடம் செல்லாதே.
96. மொழிவது அறமொழி - சந்தேகத்துக்கிடமில்லாத நல்ல சொற்களையே கூறு
97. மோகத்தை முனி - பேராசையை விரட்டி விடு
98. வல்லமை பேசேல் - உன் திறமையை நீயே புகழ்ந்து பேசிக்கொண்டிருக்காதே
99. வாது முற்கூறேல் - வீண்வாதங்களில் முற்படாதே
100. வித்தை விரும்பு - கலைகளை விரும்பு
101. வீடு பெற நில் - மோக்ஷத்தை அடையும் நல்ல வழியிலே செல்
102. உத்தமனா யிரு - நல்லவனா யிரு.
103. ஊருடன் கூடிவாழ் - ஊரோடு கூடி வாழ்
104. வெட்டெனப் பேசேல் - கடுமையாகப் பேசாதே
105. வேண்டி வினை செய்யேல் - பிறருக்குத் திட்டமிட்டு தீங்கு செய்யாதே
106. வைகறைத் துயிலெழு - அதிகாலையிலேயெ தூக்கத்தை விட்டு எழுந்து கொள்
107. ஒன்னாரைத் தேறேல் - பகைவரை நம்பாதே
108. ஓரம் சொல்லேல் - ஏற்றத் தாழ்வாக, ஒருவர் சார்பாகப் பேசாதே.