Saturday, March 16, 2013

நன்னெறி - சிவப்ரகாச ஸ்வாமிகள் - 40

நன்னெறி - சிவப்ரகாச ஸ்வாமிகள் - 40

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!
பொருள்: மின்னொளி போன்ற ஜடாமுடிகளைக் கொண்ட

விநாயகரைத் தொழ நன்னெறி வெண்பா நாற்பதும் பாட வருமே.

1. என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.
பொருள்: மலர் சூடிப் பொலியும் பெண்ணே! நம் அழகிய கை
புகழ்ச்சிக்காக சென்று சுவையான உணவை நாவிற்குக் கொடுத்து
உதவுவதில்லை.  அது போல தீதில்லாத நல்லவர்களும் தம்மை
என்றும் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களுக்கும் சென்று பொருள்
கொடுத்து உதவுவர்.

2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு.
பொருள்: அழகிய நெற்றியை உடையவளே! குற்றமில்லாதவர் கூறும்
கடுஞ்சொற்களும் இனிது.  மற்றவர் பேசும் உற்றதான இனிய
சொற்களும் கெடுதே.  ஈசன் நல்லவனான சாக்கிய நாயனார் எறிந்த
கற்களை விரும்பினாரே அன்றி, கரும்பு வில்லால் மன்மதன் எறிந்த
மலர் அம்புகளை விரும்பவில்லை.

3. தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.
பொருள்: அழகிய கொங்கையை உடையவளே! பசுவின் பால்
வேண்டுமென்றால் அதற்குப் பிடித்த அதன் கன்றின் உதவியோடு
கறந்து கொள்வது போல், நமக்கு உதவாதவரிடமிருந்து ஒன்றைப்
பெற வேண்டுமென்றால், அவர்க்குப் பிடித்தவரின் உதவியால்
அதைப் பெற்றிட வேண்டும்.

4. பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
பொருள்: எவர்க்கும் உதவாத கருங்கடலின் நீரை புயல் மேகங்கள்
முகந்து சென்று எப்படி மழையாக எவர்க்கும் கொடுத்து
விடுகிறதோ, அது போல பிறர்க்கு உதவாதவர் பெரும்
செல்வத்தையும், எவர்க்கும் உதவுபவர் எடுத்துக் கொள்வர்.

5. நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம்.
பொருள்: பூங்குழலை உடையவளே! நெல்லிலிருந்து பிறிந்த உமி
மீண்டும் அதனோடு சேர்ந்தாலும் முன்புபோல் திடமாக இருக்காது. 
அது போலவே பிறிந்த இருவர் மீண்டும் சேர்ந்தாலும் அந்த நட்பு
அற்பமாகவே இருக்கும்.

6. காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகருமம் செய்யவே - ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண்.
பொருள்: கூறப்படும் பதினாறு கலைகளும் பொருந்திய நிலவு
போன்ற முகத்தவளே!  இரண்டு கண்களும் ஒன்றையே பார்ப்பது
போல், அன்பான கணவன் மனைவியும் ஒருமித்து தீதில்லாத ஒரு
கருமத்தையே செய்வார்கள்.

7. கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
பொருள்: பெரிதாக முழங்கிக் கொண்டிருந்த குளிர்ந்த கடல் நீரை
முனிவர்க்கெல்லாம் அரசராகிய அகத்தியர் தம் கையாலேயே
குடித்து வற்றச் செய்து விட்டார்.  எனவே நாம் கற்ற கல்வி கடல்
போன்றதானாலும், கர்வம் வந்து விட்டால் அது ஆண் சிங்கம்
போன்று நம்மைத் தள்ளி விடும்.

8. உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு?
பொருள்: திரண்டு வரும் வெள்ளத்தை எப்போதும் கடந்து விடாமல்
கரையானது காத்து விடும், கரையைத் தாண்டி வெள்ளம் ஊருக்குள்
புகுவது என்பது அரிதானது.  அது போல உள்ளத்திலிருந்து
பொங்கிவரும் கோபத்தை மனத்தில் அடக்கிக் கொள்வதே சிறந்த
குணம்.

9. மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து.
பொருள்: அன்பர்கள் படைக்கும் பலியை ஏற்றுக்கொள்ளும் சிவனது
விரிந்த சடையின் மேல் இருக்கும் பாம்பு, படர்ந்த சிறகுடைய
கருடனைப் பார்த்து அஞ்சாது.  அது போல மெலிந்தோர்
வலிந்தோரை அண்டி விட்டால், பலம் மிகுந்த தன் எதிரியிடம்
பயப்படத் தேவையில்லை.

10. தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று.
பொருள்: நிலவானது தன்னிடமிருக்கும் கறையான இருளை நீக்கிக்
கொள்வது பற்றி நினைக்காது, மேலே நின்று உலகில்
படர்ந்திருக்கும் இருளைப் போக்கவே நினைக்கும்.  அது போலவே
உயர்ந்தோரும் தன் குறைகளையும், கஷ்டங்களையும் பற்றி
நினையாது, தளர்ந்து தன்னிடம் வந்து பிறர்க்கூறும் கஷ்டங்களைத்
தீர்த்து வைப்பர்.

11. பொய்ப் புலன்கள் ஐந்து நோய் புல்லியர் பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும் கொல் கல்தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.
பொருள்: சூறாவளியால் சிறு துரும்பை சுழற்றித் தூக்கி எறிய
முடியுமே அன்றி கல்தூணிடம் அதன் பலம் செல்லாது. 
அதுபோலவே பொய்யான நமது ஐம்புலன்களும் மெலிந்தோரிடமே
துன்பங்களை உண்டாக்குமே அன்றி மெய்யறிஞர்களை அதனால்
ஒன்றும் செய்து விட முடியாது.

12. வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு.
பொருள்: திருத்தமான அணிகலன்களை உடையவளே! குளிர் நீர்
பொத்தல் உள்ள குடத்தில் நிற்காது வெளியே ஒழுகிவிடுவது
வியப்பல்ல, அந்த ஓட்டைக்குடத்திலேயே அது தங்கியிருந்தால்
அதுவே வியப்பு.  அது போல ஒன்பது ஓட்டைகளுள்ள இந்த
உடம்பில் வெளியேறிவிடாமல் உயிர் இருந்து கொண்டிருக்கிறதே
அதுவே வியப்பு.

13. பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்ற முலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
பொருள்: மலைபோன்ற கொங்கைகளை உடையவளே! நிலவின்
கிரணங்கள் அதன் கலைகளைப் பொறுத்து ஏறி, இறங்கும்.  அது
போலவே மேலோர், கூடிக், குறையும் தன் செல்வச் செழிப்பை
ஒட்டி விருப்பத்தோடு பிறர்க்கு உதவுவர்.

14. தொலையாப் பெரும் செல்வந் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் இலையால்
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈரங்கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.
பொருள்: ரீங்காரம் செய்யும் வண்டு மொய்க்கும் மலர்களை
அணிந்தவளே! தொலையாத செல்வத்தை மேரு மலையை விட
அதிகமாக சேர்த்து விட்டோம் என்று செருக்கு மேலோரிடம்
இருப்பதில்லை.

15. இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழியிலார்க்கு ஏதுமுது நூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு.
பொருள்:  நல்ல குணமுடையவளே! ஊமைகளுக்கு பழம்பெரும்
நூல்களால் என்ன பயன்?  குருடர்களுக்கு விளக்கால் என்ன
பயன்?  அது போலவே அன்பு இல்லாதவர்க்கு இங்கு இடம்,
பொருள், ஏவல், இன்னும் மற்றெதெல்லாம் இருந்தும் என்ன பயன்?

16. தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.
பொருள்: கடலானது தன்னை அடுத்த உப்பங்கழியிலும் பாய்வது
போல, உயர்ந்தோர் மதியாதவராயினும், இழிந்தவராயினும் தன்னை
அண்டினவரை தன்னையும், தன் நிலையையும் ஆராய்ந்து அவர்
தம் துன்பம் தீர்ப்பர்.

17. எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்றவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ!
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி.
பொருள்: பசும்பொன்னாலான வளையல்களை அணிந்தவளே!
வாழ்ந்திருந்து எல்லாருக்கும் உதவி, அழிந்த வாழையின் கீழ்
தோன்றிய அதன் கன்றும் எல்லாருக்கும் கனி, காய், இலை, தண்டு
இவைகளைத் தந்து உதவவே செய்யும், அது போலவே பிறர்க்குக்
கொடுத்து வறுமை எய்திய தகப்பனுக்குத் தோன்றிய மைந்தர்களும்
ஈகை குணத்தோடே இருப்பர்.

18. இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன் செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல்.
பொருள்: பொன்னால் செய்த, ஒலிக்கும் வளையல்களை
உடையவளே! வெம்மையான கதிர்களை உடைய சூரியன் வரவால்
கடல் பொங்குவதில்லை, குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரன்
வரவாலேயே மகிழ்ந்து பொங்குகிறது.  அது போலவே நீரால்
சூழப்பட்ட இவ்வுலகும் இன்சொல்லாலேயே மகிழுமே அன்றி,
வன்சொல்லால் மகிழாது.

19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண்டு இன்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவர்- வல்லோர்
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர.
பொருள்: தென்றல் வரும்போது தளிர் காட்டி மலர்ந்து வளரும்
தேங்கனிகளைக் கொண்ட மாமரம், சுழல் காற்று வந்தால் வருந்தும்.
அது போல வல்லவர்களும் நல்லோர் வரவால் மலர் முகம்
கொண்டு மகிழ்வர், மற்றோர் வந்தால் புழுங்குவர்.

20. பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
பொருள்: தேர்ந்தெடுத்த அணிகளை அணிந்திருப்பவளே! முற்றிய
நோயால் வருந்தும் பிற உறுப்புகளைக் கண்டு நீர் சொரியும் கண்
போல, பெரியோர் பிறர் படும் கஷ்டங்களைக் கண்டு
நெருப்பிலிட்ட நெய் போல் உருகுவர்.

21. எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம் - எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை.
பொருள்:  கற்றோர் ஆராய்ந்து தேடும் சிவபெருமானின்
ஜடாமுடியைக் கண்டதும் கங்கையின் பெருக்கு ஒடுங்கி விடுவதைப்
போல, மெய் ஞானியர் முன் ஏனையோர் கற்ற கல்வி அனைத்தும்
இல்லாது போய் விடும்.

22. ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க - நீக்கு
பவர் யார்? அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு.
பொருள்: பாம்பிடம் தோன்றிய மணி என்றும், பாற்கடலில்
தோன்றிய விஷம் என்றும் கொள்வார் எவருமிலர். எனவே
உயர்த்துகின்ற அறிவைக் கொள்ளாது பிறப்பினால் உயர்வு தாழ்வு
பார்க்க வேண்டாம்.

23. பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்! பலகால்
எறும்பு ஊரக் கல் குழியுமே!
பொருள்: பூரித்திருக்கும் தனங்களை உடையவளே!  பலகாலம்
எறும்பு ஊரக் கல் குழிந்து விடும்.  அது போல ஆண்களுடன்
பேசிக் கொண்டிருந்தாலே, பெண்களுக்குப் பெருமையளிக்கும் கற்பு
எனும் நோன்பு கொள்ளும் நெஞ்சுறுதி தளர்ந்து விடும்.

24. உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி.
பொருள்: செழித்திருக்கும் சோலைப்பூக்களை வண்டு போய்ச்
சேரும், ஆனால் காக்கை வேப்பம்பழத்தையே விரும்பும். 
அதுபோல ஒருவரிடம் குணம் இருந்தாலும் கீழோர் பெரிதாகக்
கூறுவது அவர் குற்றங்களையே.

25. கல்லா அறிவிற் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புனையில் புகும் ஒண் பொருள்.
பொருள்: வில் போன்ற புருவங்களை உடைய கரு விழியாளே! 
பெரும் பாரமுள்ள பொருளும், தெப்பத்தில் சேர்ந்தால் தன் வலிமை
குறைந்து விடுவதைப் போல, கல்வியறிவு இல்லாத கீழோரிடம்
சேர்ந்த உயர்ந்தோர் பெருமையும் வலுவில்லாததாகி விடும்.

26. உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவாயிற்றோ விளம்பு.
பொருள்: மடந்தையே! கதிரவனின் ஒளியின் அளவு நம் கண்
அளவா அல்லது விண் அளவா கூறு.  அது போலவே
புலவர்களும் ஒருவர் உடல் சிறுமையைக் கொண்டு அவர்கள்
கல்விக் கடலின் அளவை அலக்ஷ்யம் செய்யார்.

27. கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.
பொருள்: முளைக்கும் பற்களானது கடினமான பொருள்களையும்
தான் மென்று நல்ல சுவையை நாவிற்குக் கொடுக்கும்.  அது
போலவே கற்றோரும் தன் மெய் வருத்தி, ப்ரதியுபகாரம் கருதாது
பிறர்க்கு உதவிடுவர்.

28. முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனி விளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை.
பொருள்: நன்கு பழுக்காத காயாக இருந்தாலும் வாழை
உணவுக்காகும்.  பழுத்திருந்தாலும் எட்டி உணவுக்காகுமோ சொல். 
அது போலவே கற்றோர் தம்மிடம் கோபம் கொண்டோருக்கும்
கொடுப்பர், ஆனால் மற்றோர் அவரிடம் கனிவாகப்
பேசுபவருக்கும் எதையும் கொடுக்க மாட்டார்.

29. உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடியாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதிமான்.
பொருள்: இசையை ஒத்த குளிர்ந்த பேச்சுடையவளே!  நிலவில்
இருக்கும் மான் பூமியில் இருக்கும் புலிக்கு அஞ்சுமோ?  அது
போல நெஞ்சத்தை உயர்ந்த பரம்பொருளிடம் வைத்தோர் உடலுக்கு
ஒரு கோடி துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும் கவலைப்பட
மாட்டார்கள்.

30. கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு.
பொருள்: வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டு வைக்காதவர்
பெருக்கெடுத்து வெள்ளம் வரும்போது என்ன செய்வார் கூறு.  அது
போலவே உயிரைக் கொள்ளும் யமன் வருவதற்கு முன்பே
மனங்கனிந்து அறம் செய்து பிழைத்துக் கொள்ள வேண்டும்.

31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேல்
கை சென்று தாங்கும் கடிது.
பொருள்: பொருந்திய அணிகளை உடையவளே! உடலின் மேல்
பெரிய குச்சியின் அடி விழுவதற்கு முன் கையானது விரைந்து
சென்று தன் மேல் வாங்கிக் கொள்ளும்.  அது போல
பேரறிஞர்களும் பிறர் துன்பங்களைத் தாங்க வீரத்தோடு விரைவார்.

32. பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ் ஒன்று உயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான்.
பொருள்: வைரம் பாய்ந்த திண்மை கொண்ட உயர்ந்த கதவும்
தாழ்ப்பாள் இல்லையென்றால் வலுவில்லாததே.  நன்னெறிகளை
உடையவளே! அது போல சொல்லப்படும் நூல்களின் பயனை
அறியாதவர் செய்யும் அறங்களும் பயனற்றதே.

33. எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல்.
பொருள்: நாம் கட்டும் குளத்திற்கு நீர் தளும்பாது இருக்க கரை
கட்டுகிறோம்.  ஆனால் கடலுக்குக் கரை கட்டுவதில்லை.  அது
போல நம்மை தூற்றாதிருப்பதற்காக இழிந்தவர்களைப் போற்றிக்
கொண்டிருக்கலாம்.  ஆனால், குறைவற்ற அறிவுடையோருக்கு
அந்த போற்றுதல் தேவையில்லை.

34. அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.
பொருள்: பிறை போன்ற நெற்றியை உடையவளே! அழகு தரும்
ஒளி பொருந்திய விழி இருளைக் கண்டு அஞ்சும்.  குருட்டுக் கண்
இருளுக்குப் பயப்படுவதில்லை.  அது போல அறிவுடையோர்
அன்றி அறிவு இல்லாதவர் தம்மைச் சேரும் பழியைக் கண்டு அஞ்ச
மாட்டார்.

35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்.
பொருள்: வெற்றிதரும் நீண்ட வேல், என்னைப் பழிக்காதே என்று
வேண்டிக்கொள்ளும் விழியாளே! வாழைப்பழம் பாலை வேண்டும்,
புளியம்பழம் பாலை விரும்புவதில்லை. அது போல மேன்மக்களே
கற்றோரை விரும்புவர், மற்றவர் மதிப்பதில்லை.

36. தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய்.
பொருள்: எப்போதும் நெல்லுக்கு நீரை இறைப்போமே அன்றி
காட்டில் வளரும் புல்லுக்கு இறைப்பதில்லை.  அது போல
உயர்ந்தோர் தகுதியுள்ளோருக்கே உதவுவர்.

37. பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் சொல்
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
பொருள்: லக்ஷ்மிதேவியை அழகில் வென்றவளே! அகஸ்திய
முனிவர் முன் உயர்வு பேசிய விந்திய மலை அன்று தாழ்ந்து
போயிற்று.  அது போல பெரியோர் முன் தன்னைப் புகழ்ந்து
பேசிக்கொள்ளும் மூடனும் உயர்வு நீங்கித் தாழ்வான்.

38. நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய் முற்றின் தின்தீங் கனியாம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம்.
பொருள்: நல்லவளே கேள்! காய் முற்றினால் உண்பதிற்கு இனிய
கனியாகும்.  இளந்தளிர் முற்றி என்ன ஆகப்போகிறது?  அது
போல நல்லோர் சேர்க்கை நாள்தோறும் நல்லதே.  ஆனால் தீயோர்
சேர்க்கை அப்படி ஆகாது.

39. கற்று அறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே - பொற்றொடீஇ
சென்று படர்ந்த செழுங்கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
பொருள்: பொன் வளையல்களை அணிந்தவளே!  சென்று படர்ந்த
செம்மையான கொடியில் மலர்ந்த மலருக்கு மலர்ந்த ஒரு தினமே
மணமிருக்கும்.  அது போல கல்லாதோரோடு செய்யும் ஆழ்ந்த
நட்பும் சேர்ந்து இருந்தாலும் தீமையையே கொடுக்கும்.

40. பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்.
பொருள்: பொன் போன்றவளே!  மின்னும் அணிகலன்களை
அணிந்திருந்தாலும் எந்த உறுப்புகளும், எதையும் அணியாத
கண்ணுக்கு ஒப்பாவதில்லை.  அது போலவே பொன் அணியும்
வேந்தர்களும் அதை அணியாத பெருங்கல்வி உடைய அறிஞருக்கு
ஒப்பாகார். 

Saturday, January 12, 2013

நல்வழி - ஔவை - 40

நல்வழி - ஔவை - 40
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
பொருள்: பால், தெளிந்த தேன், வெல்லப்பாகு, பருப்பு இவை
நான்கையும் கலந்து (பாயஸம்!) நான் உனக்கு தருவேன்,
உயிர்களுக்கு நல்லது செய்யும், உயர்ந்த யானை முகம் கொண்ட
விநாயகப் பெருமானே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றையும் தா.

1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
பொருள்: நாம் செய்யும் புண்ய கார்யங்கள் நமக்கு உயர்வைத்
தரும்.  பாவ கார்யங்கள் நமக்கு அழிவைத் தரும்.  நம் முன்
பிறப்பில் நாம் செய்த அவைகளே நமக்கு சொத்து.  யோசித்துப்
பார்த்தால் எந்த சமயமும் இதைத் தவிர வேறெதையும்
சொல்லவில்லை.  எனவே தீதை ஒழித்து நன்மையே செய்யுங்கள்.

2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
பொருள்: நீதி நூல்களில் உள்ள முறை தவறாது பிறர்க்கு உதவுபவர்
பெரியோர், உதவாதவர் இழிந்தோர்.  சொல்லப்போனால் உலகில்
இது இரண்டே சாதிகளாகும்.

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
பொருள்: துன்பங்களை இடும் பை இது, இதையே இயல்பாக
உடைய உணவை இடும் இந்த பொய்யுடலை மெய்யென்று
நினைத்துக் கொண்டு இருக்காதே.  விரைந்து பிறர்க்கு
உதவுவதையே செய்து வந்து, சம்சாரம் எனும் இந்த பெரும் நோயை
வென்றவரை மோக்ஷமாகிய வீடு அழைத்துக் கொண்டாடும்.

4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
பொருள்: நாம் செய்த புண்யத்தின் காலம் வராத போது நாம்
திட்டமிட்டுச் செய்தாலும் ஒரு கார்யத்தின் பலன் கிடைக்காது. 
காலம் வந்தாலே பலன் கிடைக்கும்.  காலம் கருதாது செய்த
முயற்சி, மாங்காய்க்கு ஆசைப்பட்டு ஒரு குருடன் எறிந்த அவன்
ஊன்று கோல் போல் ஆகிவிடும்.  (நடக்க இருந்த கோலும் போய்,
மாங்காயும் கிடைக்காதது போல்)

5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா - இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
பொருள்: நமக்கு என்று விதிக்கப்படாத ஒன்று நாம் எவ்வளவு
வருந்தி முயற்சித்தாலும் நமக்குக் கிடைக்காது.  நமக்கு என்று
விதிக்கப்பட்ட ஒன்று நாம் எவ்வளவு சொன்னாலும் நம்மை விட்டுப்
போகப்போவதுமில்லை.  ஆனால் இவைகளையே வெகுகாலம்
ஏங்கி நினைத்து நெஞ்சம் புண்ணாகி பின் இறந்து போவதே மனிதர்
தொழிலாகி விட்டது.

6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு
பொருள்: திரைகடல் தாண்டிப் போய் வந்து வேலை செய்து
பொருள் சேர்த்தாலும் ஒருவர்க்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்
என்று விதி இருக்கிறதோ அவ்வளவே கிடைக்குமே ஒழிய,
இன்னொருவர் சுகமும் சேர்த்து அவருக்குக் கிடைக்கப்
போவதில்லை.

7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
பொருள்: எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடல் புழுக்களும்,
நோய்களும் மலியும் இடமே.  இதை அறிந்த நல்லவர்கள் தாமரை
இலை நீர்ப் போல இதனிடம் பற்று வைக்காமலே இருப்பர். 
பிறரிடமும் இதைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்க
மாட்டார்கள்.

8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்
பொருள்: அகிலத்தில் வாழும் மனிதர்களே!  எண்ணிறந்த வழிகள்
பொருள் தேடுவதற்கு இருந்தாலும், விதி நமக்கென்று
விதித்திருந்தாலன்றி எதுவும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை. 
கிடைத்தாலும் நிலைப்பதில்லை, எனவே நல்ல மரியாதையை
மட்டுமே விரும்பித் தேடிக் கொள்ளுங்கள்.

9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து
பொருள்:  பெருக்கெடுத்து ஓடிய நீர் வற்றி, கால் சுடும் அளவிற்கு
காய்ந்திருந்தாலும் ஆறானது தனது ஊற்று நீரால் உலகை ஊட்டி
வாழ்விக்கும்.  அதுபோலவே வறுமை அடைந்த போதும் நல்ல
குடியில் பிறந்தவர்கள் தகுந்தவர்களுக்கு இல்லை என்று சொல்ல
மாட்டார்கள்.

10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.
பொருள்:  மக்களே!  ஆண்டுகள் தோறும் அழுது புரண்டாலும்
இறந்தவர் மீண்டும் வரப்போவதில்லை.  நாமும் அவ்வழியிலேயே
போகப்போகிறோம்.  எனவே நாம் இருக்கும் வரை எந்தக்
கவலையும் கொள்ளாமல் பிறர்க்கும் கொடுத்து நாமும் உண்டு
இருப்போமாக.

11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது
பொருள்: பெரும் துன்பத்தைத் தரும் என் வயிறே!  நீ ஒரு
நாளைக்கு உணவில்லையென்றாலும் பொறுத்துக் கொள்வதில்லை. 
கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்கு எடுத்துக் கொள்
என்றாலும் கேட்பதில்லை, என் கஷ்டத்தை அறியாத உன்னோடு
வாழ்வது பெரும் கடினம்.

12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
பொருள்:  அரசனும், ஆற்றங்கரையிலிருக்கும் மரங்களும் அறிய
வாழ்ந்த உயர் வாழ்வும் வீழ்ந்து விடும்.  ஆனால் உழவு செய்து
வாழ்வதற்கு என்றுமே வீழ்ச்சியில்லை.  வேறெந்த வேலைக்கும்
வீழ்ச்சி என்பது உண்டு.

13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்
பொருள்: இந்த புவியில் மெய்யாக வாழ இருப்பவரை யாரும்
அழிக்கவும் முடியாது, அழிய இருப்பவரைக் காக்கவும் முடியாது,
ஓயாது பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவரை விலக்கவும் முடியாது.

14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்
பொருள்:  பிச்சை எடுப்பதை விட மேலானது, பிறரை அண்டி
அவருக்கு இதமாகப் பேசி மானத்தை விட்டு வயிறு வளர்ப்பது. 
சீச்சீ, இதற்கு மானத்தைக் காத்துக் கொண்டு இறந்து போவதே
மேல்.

15. சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்
பொருள்: சிவனை நினைத்திருப்பவர்களுக்கு ஒரு நாளும் துன்பம்
என்பது இல்லை.  அதுவே அறிவிற்சிறந்த வழியாகும்,
மற்றவையெல்லாம் விதிப்படியே நடந்து விடும்.

16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி
பொருள்: இந்த உலகத்தில் நீரின் குணம் நிலத்தின் தன்மையை
சார்ந்தும், உயர்ந்தோர் குணம் அவர்கள் கொடையைச் சார்ந்தும்,
கண்களின் குணம் மாறாத கருணையாலும், பெண்களின் குணம்
அவர்கள் கற்பைச் சார்ந்தும் இருப்பதை பெரும் விஷயங்கள் என்று
அறிந்து கொள்.

17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
பொருள்: நாம் செய்த தீவினைகள் பல இருக்கும் போது
தெய்வத்தை நிந்திப்பதால் பெரும் பொருள் நம்மைத் தேடி வந்து
விடுமா?  வசதி இருக்கும் போது பாவம் தீரும் என்று கருதியாவது
பிறர்க்கு உதவி செய்யாதவர்க்கு, வெறும் பானை பொங்குவது
போலவே அவர் தேடும் செல்வமும்.

18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
பொருள்: இந்த உலகத்தில் கருமிகளாக இருப்பவர்கள், பெற்றோர்,
உடன்பிறந்தோர், நமது நாட்டவர், உறவினர்கள், நண்பர்கள் என
எவர் வந்து கெஞ்சினாலும் உதவ மாட்டார்கள்.  வேறு யாராவது
வந்து துன்புறுத்தினால்தான் கொடுப்பார்கள்.

19. சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்
பொருள்: இந்தப் பாழும் உடலையும், வயிற்றின் பசிக்
கொடுமையையும் த்ருப்தி செய்ய, ஒரு படி அரிசிக்காக நாம்
ஒருவனுக்கு சேவகம் செய்கிறோம், போய் பிச்சை கேட்கிறோம்,
கடல் கடந்து போகிறோம், தகுதியில்லாதவனை எல்லாம் பெரிதாக
பாவிக்கிறோம், போற்றிப் பாடி, அவன் கூறுவதற்கெல்லாம்
இசைகிறோம். 

20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்
பொருள்: விலை மாதர்களுடனான கொண்டாட்டம் இம்மை, மறுமை
இரண்டுக்குமே நல்லதன்று.  அம்மிக் கல்லைத் தெப்பமாக நம்பி
ஆற்றில் இறங்குவது போல, அது பெரும் செல்வத்தையும் அழித்து
நம்மை வெறுமைக்கு இட்டுச் சென்று விடும்.

21. நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்
பொருள்: சிவந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி
வஞ்சமில்லாதவர்க்கு நீர், தங்குமில்லம், நிலம் நிறைந்த உணவு,
சிறந்த பேர், புகழ், பெருமையான வாழ்வு, ஊருக்கே தேவையான
செல்வம், நீண்ட வாழ்நாள் இவை அனைத்தையும் தருகிறாள்.

22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
பொருள்:  பாடுபட்டுத் தேடிய பொருளை பிறர்க்குக் கொடுத்து
உதவாது புதையல் போல வைத்துப் பாதுகாக்கும் அறிவு கெட்ட
மனிதர்களே! பாவிகளே!  நீங்கள் இங்கிருந்து இறந்து போகும்
போது அந்தப் பணத்தை யார் அனுபவிக்கப் போகிறார்கள்?

23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
பொருள்: நீதிமன்றத்திலே ஒரு கட்சியின் சார்பாகப் பேசுபவர்
வீட்டில் பேய் புகுந்து விடும், பாழடைந்து வெள்ளெருக்கம்பூ பூத்து
விடும், பாதாளத்தில் பாயும் கொடிகள் படர்ந்து விடும், மூதேவி
சென்று வாழ்வாள், பாம்பு புகும்.

24. நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை
பொருள்:  திருநீரணியாத நெற்றியும், நெய்யில்லாத உணவும்,
ஆறில்லாத ஊரும், மாறுபாடில்லாத உடன்பிறப்பில்லாத உடலும்,
நல்ல மனைவியில்லாத வீடும் பாழே.

25. ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
பொருள்: வரவுக்கு அதிகமாக செலவாகி விட்டால் மானம் அழியும்,
அறிவும் அழியும், போன திசையிலெல்லாம் திருடனைப் போலப்
பார்ப்பார்கள், ஏழு பிறவியிலும் தீயவனாகி விடுவோம்,
நல்லவர்களுக்கும் விரும்பாதவர்களாகி விடுவோம்.

26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்
பொருள்:  நம் மானம், குலப்பெருமை, கல்வி, திறமை, அறிவு,
கொடை குணம், தவம், உயர்வு, நிர்வாக குணம், தேன் போலப்
பேசும் பெண்களின் மேல் கொண்ட காதல் இந்த பத்தும் பசி வந்து
விட்டால் பறந்து போய் விடும்.

27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்
பொருள்: நாம் நினைக்கும் ஒன்று கிடைக்காமலே போகும், அல்லது
கிடைத்தாலும் கிடைத்து விடும், மற்றொன்று நினைக்கும் முன்பே
நமக்கு வந்து சேர்ந்தும் விடும், இவையெல்லாம் அந்த சிவன்
செயலே.

28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
பொருள்: சாப்பிடுவது ஒரு படி அரிசி, உடுப்பது நான்கு முழத்
துணி, ஆனால் நம் எண்ணங்களோ எண்பது கோடி,
கண்மூடித்தனமான இந்த மனித வாழ்க்கை மண்பானையைப் போல
சாகும் வரை துன்பம் தான்.

29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கன்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்
பொருள்: மரம் பழுத்து விட்டது, வா! என்று யாரும் இங்கு
வௌவாலை அழைப்பவரில்லை, பசுவானது, சுரக்கும் அமுதமான
பாலைக் கன்றுக்கு தருவது போல ஓயாது கொடுத்துக் கொண்டே
இருந்தால், இந்த உலகத்தவர் எல்லாம் நம்மிடம் உற்றாராகவே
இருப்பர்.

30. தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி
பொருள்: வேந்தே! அவரவர் முற்பிறப்பில் செய்த
வினைப்பயன்களை ப்ரம்மன் எழுத்துப்படியே அவரவர்
அனுபவிப்பர், தீயவர்களையெல்லாம் என்ன செய்ய முடியும்? 
எல்லாரும் சேர்ந்து வெறுத்தாலும் விதி போய் விடுமா என்ன?

31. இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய்(;) பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி
பொருள்: குற்றமுள்ள பாட்டை விட வெறும் இசையே சிறந்தது. 
உயர்ந்த குலம் என்று சொல்லிக் கொள்வதை விட சிறந்த ஒழுக்கமே
மேலானது.  முறை தவறின வீரத்தை விட விடாத நோயே சிறந்தது.
பழிக்கு அஞ்சாத மனைவியை விட தனித்து வாழ்தலே சிறந்தது.

32. ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து
பொருள்: மக்களே! செல்வமானது ஆற்றில் தோன்றும் மேடு,
பள்ளங்களைப் போன்று நிலையில்லாதது.  எனவே பிறர்க்கு
சோறும், நீரும் கொடுத்து தர்மம் செய்யுங்கள், அது உள்ளத்தில்
ஒழுக்கத்தை உயர்த்தி வளர்க்கும்.

33. வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
பொருள்: யானையைக் குத்திப் பாயும் வேல் கொம்பு பஞ்சில்
பாயாது.  நீண்ட இரும்பு கடப்பாறையால் பிளவு படாத கற்பாறை
பசு மரத்தின் வேரினால் பிளவு பட்டு விடும். எனவே கடும்
சொற்கள் இனிமையான சொல்லை வென்று விடாது.

34. கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்
பொருள்: படிக்காதவன் ஆயினும் ஒருவனிடம் பொருள் வந்து
விடுமானால் எல்லாரும் அவனை சென்று போற்றி அழைப்பர். 
பொருளில்லாதவனை மனையாளும் விரும்ப மாட்டாள், மேலும்
ஈன்றெடுத்த தாயும் விரும்ப மாட்டாள், அவன் சொல்லுக்கும்
எங்கும் மதிப்பு இருக்காது.

35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு
பொருள்: பூக்காமலே காய்க்கும் மரமும் உண்டு, மக்களுள்
மற்றொருவர் கூறாமல் தானே உணர்ந்து செயல் செய்வோரும்
உண்டு, வேண்டி விதைத்தாலும் முளைக்காத விதையைப் போல
அறிவில்லாதவர்க்கு அடுத்தவர் சொன்னாலும் எந்த உணர்வும்
வராது.

36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம்
பொருள்: ஒளி பொருந்திய வளையல்களை அணிந்தவளே! 
நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் தான் அழியும் காலம்
வந்தால் தான் கருவைப் பிறப்பிக்கின்றன.  அதுபோல அறிவு,
செல்வம், கற்ற கல்வி இவைகள் அழியும் காலம் வந்தாலே ஒருவர்
அயல் மாதர் மேல் பற்று கொள்கின்றனர்.

37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி
பொருள்: நெஞ்சே! கவலைப் படாதே, விதியை வெல்வதற்கு வேதம்
முதலான அனைத்து நூல்களிலும் ஒரு வழியும் இல்லை.  நாம்
நினைப்பதெல்லாம் நடப்பதுமில்லை, ஆனால் முக்தியை அடையும்
வழியில் இருப்பவர்க்கு விதி என்று ஒன்று இல்லை. 

38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
பொருள்: நல்லதென்றும், தீயதென்றும், தானென்றும், தனதென்றும்,
வேண்டியதென்றும், வேண்டாததென்றும் இரண்டற்று நிற்கும்
நிலையே தத்துவமாம்.  இதை விட மெய்ப் பொருள் என்ற ஒன்றை
வேறெங்கோ தேடுவது, சம்பா நெல்லை அறுத்தவர் அதைக்
கட்டுவதற்கு (அதிலேயே கயிறு திரித்துக் கொள்ளலாம்)
வேறெங்கோ கயிறைத் தேடுவது போன்றது.

39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு
பொருள்: முப்பது வயதாகும் அளவில் மண், பெண், பொன்
ஆசைகளை விடுத்து ஒருவன், மேலான இறையைத் தவறாமல்
தேடிப் பெறவில்லை என்றால் அவன் வளர்ச்சி பெண்களின்
முலையளவே ஆகும், கற்ற கல்வியும் கிளி கூறுவதையே கூறிக்
கொண்டிருத்தல் போலாகும்.

40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
பொருள்: தேவர் திருக்குறளும், நான்கு வேதங்களின் முடிவான
உபநிஷத்துக்களும், மூவர் மொழிந்த(அப்பர் சுந்தரர் சம்பந்தர்)
திருமறையும், மாணிக்க வாசகர் மொழிந்த திருக்கோவையும்,
திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் கூறுவது ஒரே
விஷயத்தைத்தான்.